என்னைத் தேடிவந்த மகனை இன்று நான் தேடி அலைகிறேன்!
இறுதி யுத்தத்தின்போது படுகாயமடைந்து என்னைத் தேடிவந்த மகன் காணாமல் போனநிலையில் இன்று அவனைக் கண்டுபிடிப்பதற்காக பல இடங்களிலும் சென்று தேடி அலைகிறேன் என காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரிகளின் முன்னிலையில் தாயொருவர் கண்ணீர்மல்க சாட்சியமளித்துள்ளார்.
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் குறித்த ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் சாட்சியப் பதிவுகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினமும் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது முல்லைத்தீவு சுதந்திரபுரம், கால் ஏக்கர் பகுதியைச் சொந்த இடமாகக்கொண்ட தாயொருவர் காணாமல் போன 16 வயதுடைய செல்வகுமார் நந்தகுமார் என்ற தனது மகன் தொடர்பில் சாட்சியமளித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து சாட்சிமளித்ததாவது,
இறுதி யுத்தத்தின்போது சுதந்திரபுரத்திலிருந்து குடும்பமாக இடம்பெயர்ந்து வலைஞர் மடம் ஊடாக முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்றபோது 2009 ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற எறிகணைத் தாக்குதலில் நான் படுகாயமடைந்திருந்தேன். இதன்போது எனது மகன் உறவினர் ஒருவரின் வீட்டில் மறைந்தே இருந்துள்ளார்.
படுகாயமடைந்த என்னை 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி கப்பல் மூலம் திருகோணமலை புல்மோட்டைப் பகுதிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் என்னை காணாத எனது மகன் அப்பகுதிகளில் தேடி அலைந்துள்ளார். இதன்போதே எனது மகன் காணாமல் போயுள்ளார். எனினும் எனது மகன் 2009 மே மாதம் 20ஆம் திகதி வட்டுவாகல் இராணுவ முகாமில் நின்றுள்ளதாக எனது உறவினர்கள் தெரிவித்தனர். இதன்போது எனது மகனை தம்முடன் வருமாறும் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்தனர். எனினும் அவர் வருவதற்கான சூழல் அங்கு காணப்படவில்லையென குறித்த உறவினர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
இதன்பின்னர் காணாமல் போன எனது மகனை பல இடங்களில் சென்று விசாரித்து வந்துள்ளேன். எனினும் இதுவரை எந்தப் பதிலும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும் எனது மகன் இன்றுவரை உயிருடனேயே உள்ளான் என்பது எனக்குத் தெரியும்.
இதேவேளை வவுனியா குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வீட்டிற்கு வந்து காணாமல் போன மகன் தொடர்பான தரவுகளையும் திரட்டியிருந்தனர். அத்துடன் எனக்கு உதவிகளை வழங்குவதாகவும் கூறினர்.
எது எவ்வாறாக இருந்தாலும் எனது மகன் மட்டுமே எனக்கு வேண்டும். எனது மகனுக்காக வழங்கப்படும் எந்த உதவிகளும் எனக்குத் தேவையில்லை. உயிருடன் உள்ள எனது மகனை தயவுசெய்து மீட்டுத் தாருங்கள் என கண்ணீர் மல்க ஆணைக்குழு முன்னிலையில் குறித்த தாய் சாட்சியமளித்தார்.