பேரவை மீதான குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்கிறோம்! - கஜேந்திரகுமார்
தமிழ் மக்கள் பேரவையினது தீர்வு தீட்டம் வெறுமனே ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதாக மட்டுமே இருப்பதாகவும், இந்த திட்டமானது முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டமாக இல்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிடுகின்றார்.
தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பில் கொழும்பு வாழ் தமிழ் மக்களின் கருத்தறியும் நிகழ்வு நேற்று(சனிக்கிழமை) கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் பேரவை மீதான குற்றச்சாட்டு குறித்து கருத்துரைக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
‘தமிழ் மக்கள் பேரவையினது தீர்வு தீட்டம் வெறுமனே ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதக மட்டுமே இருப்பதாகவும், இந்த திட்டமானது முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டமாக இல்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்கின்றோம்.
நாங்கள் முஸ்லிம் மக்களுக்கான ஒரு தீர்வு திட்டத்தினை முன்வைக்கும் போது, முஸ்லிம்களுக்கான தீர்வு திட்டத்தினை முன்வைப்பதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது என்று கேள்வி எழுப்பப்படலாம். அதேபோன்றே மலையக மக்கள் சார்பிலும் எம்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படலாம்.
இந்நிலையில், எமது தீர்வுத்திட்டம் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு தீர்வு திட்டமாக அமைந்திருந்தது. இந்த தீர்வு திட்டத்தில் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கான தீர்வோ, மலையக தமிழர்களுக்கான தீர்வோ உள்ளடக்கப்படவல்லை.
ஆனாலும், வடக்கு கிழக்கிலுள்ள முஸ்லிம்களும் தங்களுக்கான தீர்வுதிட்டம் இதுதான் என்று எம்மோடு இணைந்து கூறும்பட்சத்தில் எமது யோசனையில் அவர்களின் அரசியல் அபிலாஷைகளையும் உள்ளடக்கி எமது தீர்வு திட்டத்தினை திருத்தி முன்வைப்பதற்கு தயாராகவுள்ளோம்.
அதேபோல் மலையக மக்கள் தங்களது அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்துகின்ற போது, அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பினையும், ஆதரவினையும் வழங்க தயாராக இருக்கின்றோம்.’ என்றும் கூறினார்.