நாட்டில் நிலவும் கடும் வெப்பத்தால் குடிநீருக்கு தட்டுப்பாடு!
நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பநிலை காரணமாக மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளதுடன் குடிநீர் பிரச்சினையையும் எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பாக வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பிரதேசங்களில் நிலவிவரும் கடும் வரட்சியால் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, மலையகத் தின் நீர்த்தேக்கங்கள் பலவற்றில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது.
கொத்மலை நீர்த்தேக்கத்தில் 25 சதவீதம் வரை நீர்மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளது டன், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இலங்கை மகாவலி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
காசல்றீ, மவுசாகலை மற்றும் சமனல வெவ ஆகிய நீர்த்தேக்கங்களிலும் வெகுவாக நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக மகாவலி அதிகாரசபை சுட்டிக்காட்டியுள் ளது.
மேலும், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான 63 நீரேந்து பகுதிகளில் நீரின் கொள்ளளவு 80 முதல் 85 வீதம் வரை காணப்படுவதாக திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தற்போது கடும் உஷ்ணத்துடன் கூடிய வெப்பக் காலநிலை நிலவி வருகின்றது. இதனால் மக்கள் அதிகம் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். காலநிலை மாற்றத்தினால் சிறுவர்கள், வயோதிபர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பகலில் அதிக உஷ்ணமும் இரவு வேளையில் கடும் பனி நிலவுவதாலும் மக்கள் காய்ச்சல், தடிமன், இருமல் போன்ற நோய்களுக்கு ஆளாகிவருகின்றனர்.
இதேவேளை, இந்நாட்களில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாடுபூராகவும் வரட்சியான காலநிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, நீர்மின் உற்பத்தி 20 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமையே இதற்குக் காரணம் என அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட தெரிவித்தார்.
வரட்சி நிலை தொடரும் பட்சத்தில் எதிர்காலத்தில் மாற்று மின் உற்பத்தி திட்டத்தை நாடவேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலைமையை எதிர்கொள்வதாயின், மக்கள் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.