Breaking News

வடக்கில் ஊடக சுதந்திரம் உறுதிசெய்யப்பட வேண்டும்!

தெற்கில் ஊடகங்களுக்கு இருக்கும் சுதந்திரத்தைப் போன்று வடக்கிலும் ஊடக சுதந்திரம் உறுதிசெய்யப்பட வேண்டுமென, ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வட மாகாணத்திற்குச் சென்றுள்ள ஊடக அமைச்சர், நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்கத்தில் ஊடகங்கள் உறுதியான பங்களிப்பை வழங்குவதாக குறிப்பிட்ட அமைச்சர், இதனை மென்மேலும் வலுப்படுத்தும் வகையில் வட பகுதி ஊடகங்கள் சுதந்திரமாக செயற்படும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

‘வாருங்கள் ஒன்றாய் சுவாசிக்க’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஊடக அமைச்சரின் இந்த யாழ் விஜயம் அமைந்துள்ளது. சுமார் 15 வருடங்களின் பின்னர் ஊடக அமைச்சர் ஒருவர் யாழ்ப்பாணம் சென்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதேவேளை வடக்கில் காணாமல் போன ஊடகவியலாளர்கள் மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் இன்றைய தினம் பங்கேற்கும் அமைச்சர், பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உதவித் திட்டங்களையும் வழங்கி வைப்பார். அத்தோடு, நாளைய தினம், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கும் நிகழ்வில் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது