இராணுவ முகாமில் இருப்பதாக தொலைபேசியில் கதைத்த எனது அண்ணா எங்கே?
வவுனியா - பம்பைமடு இராணுவ முகாமில் இருப்பதாக தொலைபேசியில் கதைத்த எனது அண்ணா எங்கே? என காணாமற்போனோர் விசாரணை செய்யும் ஆணைக்குழு அமர்வில் தங்கையொருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகள் நேற்று சனிக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மெக்ஸ்வல் பரணகம தலைமையில் இடம்பெற்றது.
290 பேருக்கான அழைப்புக்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில் பலர் வருகைதந்து விசாரணைகளில் பங்கெடுத்தனர். இவ்வாறு வருகை தந்த சகோதரி ஒருவரே தனது அண்ணாவைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.இறுதி யுத்தம் இடம்பெற்ற வேளை (2009 ஆம் ஆண்டு) கடைக்கு சென்ற அண்ணா காணாமல் போயிருந்ததாகவும் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் குறிப்பிட்ட அவர்,
அதன்பின்னர் ஐந்து வருடங்கள் கடந்த நிலையில் பம்பைமடு இராணுவ முகாமில் இருப்பதாக தொலைபேசியில் தனது அண்ணா கதைத்ததாகவும் கூறியுள்ளார்.ஐந்து வருடங்களின் பின்னர் கதைத்த அவரை சென்று பார்க்கவில்லையா என பரணகம ஆணைக்குழுவினர் கேட்டதற்கு, தனது அண்ணாவை தடுத்து வைத்துள்ள இடம் ஒரு காட்டுப் பிரதேசமென அவருடன் தடுப்பிற்கு சென்று விடுதலையாகி வந்தவர்கள் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
தொலைபேசியில் கதைத்தது அண்ணாதான் என்று நம்புகின்றீர்களா என கேட்டதற்கு, தனது அண்ணாவின் குரல் நன்றாகத் தெரியும் எனவும் அவர் தங்கள் குடும்பத்தைப் பற்றியும் அனைவரையும் விசாரித்தார் என்றும் அவர் தனது அண்ணாதான் என உறுதியாகத் தெரிவித்தார்.