பா.அகிலனின் நூல் வெளியீடு விழாவில் வடக்கு முதல்வர் ஆற்றிய உரை (படங்கள் இணைப்பு)
தலைவர் பேராசிரியர் செல்வி.கிருஸ்ணவேணி அவர்களே! நூலாசிரியர் திரு.பாக்கியநாதன் அகிலன் அவர்களே, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.வேதநாயகம் அவர்களே, யாழ் மாநகர சபை ஆணையாளர் திரு.வாகீசன் அவர்களே, திரு.நிலாந்தன் அவர்களே, மற்றும் கௌரவ விருந்தினர்களே, எனதினிய சகோதர சகோதரிகளே!
இன்றைய இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்வானது சற்று மாறுபட்ட தன்மையைக் கொண்டதாக, மக்களை சிந்திக்கத் தூண்டுவதான ஒரு நிகழ்வாக அமைந்திருக்கின்றது. நூலாசிரியரே வெளியீட்டுரை வழங்கி விட்டார். எமது கலாச்சார, பண்பாட்டு விழுமியங்கள் எம்மிடம் இருந்து எவ்வாறு சூறையாடப்படுகின்றன, அதனைக் கண்டும் காணாதவாறு வெறுமனே கண்மூடிகளாக வாழும் எம்மவர்களின் நிலை பற்றி இங்கே ஆழமாக எடுத்தியம்பி காலத்தின் விளிம்பின் கருப்பொருளைக் காட்சிப்படுத்தி விட்டார். உண்மையில் என் மனதில் கரிசனையாக எழுந்த கருப்பொருட்கள் பலவற்றைக் “காலத்தின் விளிம்பு” கோடிற்றுக் காட்டுகின்றது. இதற்கு தம்பி அகிலனுக்கு எனது நன்றியும் பாராட்டும் உரித்தாகுக.
உதாரணத்திற்கு நூலாசிரியர் அவர்கள் வீதி அகலிப்பும் அதனோடு தொடர்புபட்ட கலாச்சார விழுமியங்களின் இல்லாதொழிப்பும் என்ற விடயத்தில் நூலின் ஆரம்பம் தொட்டு இறுதி வரை ஆங்காங்கே குறிப்பிட்டிருப்பது அதன் தாக்கம் ஒரு கற்ற சமூகத்திடையே எவ்வளவு மன ஆதங்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதைத் தெளிவாகப் புரியவைக்கின்றது.
வடமாகாண வீதி அகலிப்பு மற்றும் வீதிப் புனரமைப்பு தொடர்பாக நான் கடந்த காலங்களில் பல மேடைகளிலும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடமும் பேசி வந்திருக்கின்றேன். வீதி அகலிப்பு மற்றும் வீதிப் புனரமைப்பு என்பன மத்திய அரசு ஏதோ தமிழ் மக்களுக்கு உதவி புரிவது போல ஒரு வெளித்தோற்றத்தை அல்லது வெளிப்பாட்டை ஏற்படுத்தியிருந்த போதிலும் உண்மை அதுவல்ல.
இவ்வாறான பாரிய செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை மத்திய அரசாங்கம் தன்கைவசம் வைத்து நடைமுறைப்படுத்தி வந்தது என்பதை விட இவ்வாறு அகலிக்கப்பட்ட அல்லது மறுசீரமைக்கப்பட்ட வீதிகளின் அமைவிடங்களை உற்று நோக்குவோமாயின் வீதி அகலிப்புக்கான காரணம் எமக்கு இலகுவாகப் புரிந்துவிடும். முதலில் இராணுவத்தினர் சுலபமாக எம்மைக் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தவே இவ் அகலிப்புக்கள் அல்லது புனரமைப்புக்கள் நடந்தன.
இவ்வாறான பாரிய செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை மத்திய அரசாங்கம் தன்கைவசம் வைத்து நடைமுறைப்படுத்தி வந்தது என்பதை விட இவ்வாறு அகலிக்கப்பட்ட அல்லது மறுசீரமைக்கப்பட்ட வீதிகளின் அமைவிடங்களை உற்று நோக்குவோமாயின் வீதி அகலிப்புக்கான காரணம் எமக்கு இலகுவாகப் புரிந்துவிடும். முதலில் இராணுவத்தினர் சுலபமாக எம்மைக் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தவே இவ் அகலிப்புக்கள் அல்லது புனரமைப்புக்கள் நடந்தன.
மேலும் வடபகுதி மக்களுக்கு உதவிபுரிகின்றது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி தென் பகுதி மக்களுக்கும் அங்குள்ள வர்த்தகர்களுக்கும் மற்றும் தென் பகுதியில் இருந்து இங்கு வந்து இங்கிருக்கும் வளங்களைப் பெற்றுச் சென்று அல்லது சூறையாடிச் சென்று தென்பகுதியில் பொருள் ஈட்டம் செய்பவர்களுக்கும் உதவி செய்யவே இவ் வீதிகள் அமைக்கப்பட்டன.
வீதிகள் அமைப்பதில் எமது சாதாரண மக்களுக்கு இருந்த பங்கு மிகக் குறைவு. வீதிகளில் வேலை செய்யத் தெற்கிலிருந்து வேலையாட்களைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். ஏன் என்று கேட்டதற்கு தமிழ் மக்கள் தெருக்களில் வேலை செய்யப் பிரியப்படவில்லை என்றார்கள். பிரதேச சபைகளிடம் ஆள்கேட்டு கோரிக்கை விடுத்தீர்களா என்ற என் கேள்விக்குப் பதிலில்லை.
வீதிகள் அமைப்பதில் எமது சாதாரண மக்களுக்கு இருந்த பங்கு மிகக் குறைவு. வீதிகளில் வேலை செய்யத் தெற்கிலிருந்து வேலையாட்களைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். ஏன் என்று கேட்டதற்கு தமிழ் மக்கள் தெருக்களில் வேலை செய்யப் பிரியப்படவில்லை என்றார்கள். பிரதேச சபைகளிடம் ஆள்கேட்டு கோரிக்கை விடுத்தீர்களா என்ற என் கேள்விக்குப் பதிலில்லை.
மேலும் இவ் வீதிகள் அமைக்கப்பட்ட ஒழுங்குகளைப் பார்த்தோமானால் ஒவ்வொரு வீதியும் வடபகுதியில் உள்ள கடல் உணவு வர்த்தகம் அதிகளவில் நடக்கக் கூடிய கடற்கரையை ஒட்டிய கிராமங்கள் வரை நீண்டிருந்ததை அவதானிக்க முடியும். இங்கே எமது மீனவர்கள் கடலில் பிடித்துவருகின்ற மீன் வளங்களைக் குறைந்த விலைகளில் பெற்றுக் கொண்டு அவற்றை லொறிகள் மூலமாகவும் கூலர்கள் மூலமாகவும் தென் பகுதிக்கு எடுத்து சென்று வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இவ்வீதிகள் பொருத்தமானதாக அமைந்தன.
எமக்கென வீதிகள் போடப்பட்டிருந்தால் A9 வீதியின் இருமருங்கிலும் இருக்கும் 60 வருடங்களுக்கும் மேலாக எந்தவித செப்பனிடலுங் காணாத தெருக்களும் அந்த காலகட்டத்தில் பழுது பார்க்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு நடக்கவில்லை. இப்பொழுது நாங்கள்தான் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.
இன்று வடமாகாணத் தமிழ் மக்களின் நிலை மேலும் மேலும் சங்கடத்திற்கு உட்பட்டு வருகின்றது. வடக்கை ஆக்கிரமிக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதனை உணர்ந்து நாங்கள் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தால் எம்மை அபிவிருத்திக்கு எதிரானவர்கள் என்கின்றார்கள்.
எம்மவர்களில் சிலர் அண்மையில் மத்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் 37 மாடிக் கட்டிடம் ஒன்றைத் தீவுகளில் ஒன்றில் கட்ட முனைந்தார்கள். சுற்றுச் சூழல் பற்றிய தகைமை அறிக்கை எடுக்காமலே அவ்வாறு கட்ட முனைந்தார்கள். எமது நில அமைப்பின் அடிப்படையில் ஒரு சிறிய தீவில் அப்பேர்ப்பட்ட கட்டிடங்கள் கட்டுவதால் ஏற்படக்கூடிய பலத்த எதிர்மறையான தாக்கங்கள் பற்றி உணர்ந்தே நாங்கள் அதனைத் தடுத்தோம். ஆனால் எம்மவரே எங்களைத் தூற்றினார்கள்.
கிடைக்க இருந்த நன்மையையுங் கைநழுவ விட்டுவிட்டீர்களே என்று சாடினார்கள். அபிவிருத்தி என்ற சொல்லைப் பாவித்து எமது மரபுரிமைகள், சுற்றுச் சூழல், பண்பாட்டு வரலாற்றுச் சின்னங்கள் போன்றவை பறிபோவதை எமது மக்கள் உணராது வாழ்ந்து வருவது எமக்குப் பயத்தையும் பீதியையும் உண்டாக்குகின்றன. அகிலனைப் போன்றவர்கள் மிகக் குறைவாக எம்மிடையே வாழ்ந்து வருவது எமது வருங்காலத்தைப் பற்றி நாம் வருத்தமடைய வைக்கின்றது. எமது படித்த இளைஞர் யுவதிகள் எம்மைச் சுற்றி நடப்பவை பற்றி விழிப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
அடுத்து வீடற்றவர்களுக்குப் புதிய வீடுகள் வழங்கும் நடவடிக்கைகளில் ஏதோ ஒரு நாட்டில் குறிப்பிட்ட ஒரு தேவைக்காக முன்னரே தயாரிக்கப்பட்ட per fabricated வீட்டு அமைப்புகளை இங்கே எடுத்து வந்து எமது தட்ப வெப்ப நிலைகளுக்கு சற்றுமே பொருத்தமற்ற வகையில் அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எங்கோ பாவிக்க முடியாமல் இருந்த உருக்குக் கம்பிகளை இங்கே அனுப்பி பணமாக்க முயல்வோருக்கு நாங்கள் பக்க பலமாக இருக்க முனைகின்றோம். வீடற்றவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பது மிகவும் வரவேற்கக் கூடியது. இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் சுமார் ஐந்தரை லட்சம் ரூபா செலவில் பயனாளிகளின் பங்களிப்புடன் ஒரு தொகுதி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன.
பலர் இந்த வீட்டுத்திட்டங்களை பெற்றுக் கொண்டாலும் ஒரு தொகுதியினராலேயே அவ் வீட்டு அமைப்புக்களை முழுமையாக அமைக்க முடிந்தது. ஏனையவர்கள் நிதி பற்றாக்குறை காரணமாக கடன் பெற்றோ அல்லது வேறு ஏதாவது வழியில் ஒரு தொகை பணத்தை பெற்றுக் கொண்டோ அதன்மூலம் அவற்றைப் பூர்த்தி செய்து அவ் வீடுகளில் வசிக்கின்ற போதும் அவர்களும் கடனாளிகளாகவே காணப்படுகின்றார்கள்.
இவ்வாறான வீடுகளை அமைப்பதற்கு சுமார் 8 லட்சம் ரூபா வரையில் தேவைப்படுவதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்தியா தந்த ஐந்தரை இலட்சம் பெறுமதியான வீடுகள் இனாமாக எமக்குத் தரப்பட்டவை.
ஆனால் தற்போது அமைக்கப்படுகின்ற பொருத்தப்படும் வீடுகளோ சுமார் 21 லட்சம் ரூபா வரை வீடொன்றின் பெறுமதி வரையறுக்கப்பட்டுள்ளது. இது கடனாகப் பெற்றுக் கட்டப்படுவது. குறை வட்டியுடன் திருப்பிக்கட்ட வேண்டியது. அவ்வீடுகளின் அமைப்பு முறைகள் சூழலுக்குப் பொருந்தாமலும், மாரி காலத்தில் வீட்டினுள் நீர் புகுவதற்கும், வெய்யிற் காலங்களில் அதி கூடிய வெப்பத்தை உணர வைப்பதற்கும், இலகுவில் தீப்பற்றக் கூடிய அல்லது எரிந்து போய்விடக்கூடிய தன்மைகளைக் கொண்டதாகவும், அதன் பெறுமதி சீமெந்தினால் அமைக்கக் கூடிய இரண்டு வீடுகளை அமைக்கத் தேவைப்படும் செலவை விட அதிகரித்தும் காணப்படுவதாலேயே இது பற்றி நாம் விமர்சிக்க நேரிட்டது. இன்னும் பல குறைபாடுகளை எங்கள் எந்திரிகள் எமக்கு உணர்த்தியிருந்தார்கள்.
தற்போது இவ் வீடுகளை அமைக்கின்ற நிறுவனம் அரசாங்க அதிபர் பிரதேச செயலர்கள் ஊடாக பயனாளிகளைப் பொறியில் விழுத்தக்கூடிய வகையில் ஒரு படிவத்தைத் தயாரித்து அதன் மூலமாக அவர்களின் விருப்பை வலிந்து பெற முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். வடமாகாணசபையை எந்த விதத்திலும் கலந்தாலோசிக்காமல் எமது கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுக்காமல் எம் மக்களுக்கு தான்தோன்றித்தனமாக உதவிகள் அளிக்க முன்வருவதே எமக்கு அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்துகின்றது.
இன்று வடபகுதியில் பல்லாயிரக் கணக்கானவர்கள் வீடுகளை இழந்து சிறிய தகரக் கொட்டில்களிலும், ஓலைக் கீற்றுகளுக்குக் கீழும் சொல்லொண்ணாத் துயரங்களுடன் வாழ்கின்றனர். இவ்வாறான குடும்பங்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகள் தருகின்றோம், சூரிய சக்தி மின்சாரம் தருகின்றோம், சமையல் வாயு சிலிண்டர்களுடன் கூடிய அடுப்புக்களைத் தருகின்றோம், மேசை, கதிரை, கட்டில், மெத்தை அனைத்தும் தருகின்றோம் என குறிப்பிடும் போது எந்தவொரு குடும்பத்தவரும் அந்த வீட்டை ஏற்றுக் கொள்ளவே முன்வருவர்.
ஆனால் எமது நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் தூர நோக்குடன் பார்க்க வேண்டும். முன்னர் இவ்வாறான கட்டிடங்கள் இந்நாட்டில் கட்டப்பட்டு அவை வரவேற்கத்தக்க முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றனவா? அவ்வாறான கட்டிடங்களில் காணப்பட்ட நிறைகள், குறைபாடுகள் என்ன? என்று நாங்கள் ஆராய வேண்டும். அண்மையில் நடந்த கூட்டத்தின் போது அதிமேதகு ஜனாதிபதியிடம் மேடையில் வைத்தே நான் கேட்டேன் “இவ்வாறான பொருத்தப்படும் வீடுகள் இலங்கையில் வேறெங்காவது கட்டப்பட்டுள்ளதா?” என்று. அவர் சிரித்துக் கொண்டு “இல்லை” என்றார்.
ஆகவே எமது அவலங்களை, வறுமையை, தேவையை முன்வைத்து அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களுடன் தமக்குச் சார்பான நடவடிக்கைகளில் இறங்குகின்றதோ என்று நாம் நினைக்க வேண்டியுள்ளது. எம் மக்கள் வீடுகளைத்தான் கேட்கின்றார்கள். சிங்கப்பூர் வீடுகளைக் கேட்கவில்லை. சொர்க்காபுரிக்கு வழிகேட்கவும் இல்லை. அதே செலவில் இரண்டு வீடுகள் அழகாக உள்ளூர் பாணியில் கட்டமுடியுமென்றால் சிங்கப்பூர் பாணி எதற்கு? ஒரு வீட்டுப் பணத்தில் இரு குடும்பங்களுக்கு வீடுகள் கிடைக்குமென்றால் ஒருவருக்கு ஏன் தொலைக்காட்சிப் பெட்டி பொருத்தப்பட்ட வீடு மற்றவருக்குத் தொலை நோக்கி வீட்டிற்காகத் தவமிருக்கும் பாடு? இவ்வீடுகளை அறிமுகப்படுத்த இன்னொரு காரணமும் கூறப்படுகின்றது.
சமூகம் முன்னிலை அடைவதற்கு ஏற்ற வகையில் சமயல் வாயு அடுப்புக்களைப் பயன்படுத்துவதைத் தாம் அறிமுகம் செய்வதாகக் கூறப்பட்டுள்து. சிலிண்டர் முடிந்ததும் புதிய சிலிண்டர்களை எம்மக்களே வாங்க வேண்டியிருக்கும். விறகு அடுப்புக்கள் பாவித்தால் நெருப்புப் பற்றிக் கொள்வது உறுதி. இவை எல்லாம் வேண்டுமா? வீடற்ற மக்களுக்குத்தரமான உள்ளூர் பாணியிலான வீடுகள் கட்டிக் கொடுப்பது முக்கியமா இல்லையென்றால் அரசியல் ரீதியாகத் தேர்ந்தெடுக்கும் சிலருக்கு மட்டுமே சிங்கபூர் பாணியிலான வீடுகளைக் கொடுப்பது முக்கியமா?
அண்மையில் ஒரு பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது பின்வருமாறு –
வெளிநாடுகளில் கழிக்கப்பட்ட இரும்புக் குவியல்களை கொண்டுவந்து கொட்டுவதற்கு இலங்கையின் வட கிழக்குப் பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது என்று. ஒரு காலத்தில் வளர்ச்சியுற்ற நாடுகளின் கழிவுகளைக் கப்பல்களில் கொண்டுவந்து வளர்ச்சியுறாத நாடுகளில் கொட்டிச் சென்றமை உங்களுக்கு நினைவிருக்கும். ஆகவே எம் கண்ணெதிரே எமது வாழ்க்கைமுறை மாற்றப்படுகின்றது.
அதுவும் எமக்கு நன்மை தருவதாகக் கூறி மாற்றப்படுகின்றது. இவற்றை மக்களாகிய நாங்கள் கருத்துக்கு எடுக்க வேண்டும். அதைத்தான் தம்பி அகிலன் அவர்கள் தமது நூலில் எடுத்துரைத்திருக்கின்றார்.
எமது மக்களுக்கு வீடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு மத்திய அரசை விட மாகாண அரசு கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றது. 21 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்படக் கூடிய இந்தப் புதிய ஏலவே தயாரிக்கப்பட்ட பொருத்து வீடுகளை அமைப்பதற்கு பதிலாக சீமெந்திலான உறுதியான, பொருத்தமான வீடுகளை அமைக்க இந்நிதி பயன்படுத்தப்பட்டால் 65 ஆயிரத்திற்குப் பதிலாக 150 ஆயிரம் பேருக்கு இவ் வீடுகளை வழங்க முடியும் என்ற கருத்தையே நாம் வலியுறுத்தி வருகின்றோம்.
இதைவிட வேறொரு விடயமும் கருத்துக்கு எடுக்க வேண்டியுள்ளது. எமது கலாசார, பண்பாட்டு விழுமியங்களுக்கு ஏற்றவாறு சுற்றுச் சூழலுக்கு ஏற்றவாறு எமது காலாதி கால வாழ்க்கை முறையை மாற்றாது SME எனப்படும் சிறிய மத்திய ரக தொழில் முயற்சிகளுக்கு நாங்கள் கூடிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறியதும் நாங்கள் பாரிய தொழிற்சாலைகள் கட்டப்படுவதைப் புறக்கணித்து மக்களுக்குக் கிடைக்கும் வேலை வாய்ப்புக்களை இல்லாமற் பண்ணுகின்றோம் என்று குற்றஞ் சாட்டப்படுகின்றோம்.
உலக வங்கி போன்ற நாடுகளில் இருந்து வரும் நிபுணர்கள் நாங்கள் சிறிய மத்தியரக தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதை பாராட்டுகின்றார்கள். எம்மவரில் சிலர் எம்மைச் சாடுகின்றார்கள். வருவதைச் சுருட்ட வேண்டும் என்ற ஒரு எண்ணம் எம்முள் பலரிடம் இருப்பதை நாம் காண்கின்றோம். சும்மா கிடைத்தால் விஷத்தையேனும் குடிக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் வாதம் போல் தெரிகின்றது.
மேலும் இன்றைய நூலில் எமது வாழ்வியல் அடையாளங்கள் புராதனச் சின்னங்கள் மற்றும் திருவுருவச் சிலைகள், விக்கிரகங்கள் ஆகியன வகைதொகையின்றி தென்பகுதி வர்த்தகர்களால் இங்கிருந்து வாரிச் செல்லப்பட்டிருப்பது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இங்குள்ள மக்களை விழிப்புணர்வுடன் இருக்க இவ்வாறான கருத்துக்கள், பார்வைகள் உதவி செய்வன என நம்புகின்றேன்.
அதுமட்டுமல்ல எமது பாரம்பரிய கலைப் படைப்புக்கள் பற்றியும், இரண்டாம் உலகமகா யுத்த காலத்தில் சைரன் ஒலி எழுப்புவதற்கான மேடைகள் பற்றியும், கையால் வர்ணம் தீட்டப்பட்ட ஓவியங்கள் பற்றியும், தெரு மூடி மடம், திருக்குடும்பக் கன்னியர் மடம், இந்து ஆலயங்கள், கிறீஸ்தவ ஆலயங்கள், போர்த்துக்கேய மற்றும் ஒல்லாந்தர் ஆட்சியின் போது அமைக்கப்பட்ட கட்டடங்கள் ஆகியவை பற்றியும் அவை பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும் இந் நூலில் இதன் ஆசிரியர் ஆராய்ந்திருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.
யாழ்ப்பாண அரசதானிகால எச்சங்கள், போர்த்துக்கேயர்இ டச்சுக்காரர், ஆங்கிலேயர், போன்றோர் கால மிச்சங்கள் என்று சுற்றுலாத்துறைக்குத் தேவையான பல இடங்களும் பொருட்களும் இருக்கின்றன. அவற்றை காட்சிப் பொருளாக்குவதற்கும் பாதுகாப்பதற்கும், புனர்நிர்மாணம் செய்வதற்கும் தொல்பொருள் திணைக்களம் முட்டுக்கட்டையாக இதுகாறும் இருந்து வந்துள்ளமை மனவருத்தத்தைத் தருகின்றது.
இனியாவது இவற்றில் கரிசனை எடுத்து நாம் எமது பாரம்பரியங்களை மரபுரிமைகளை பண்பாட்டு வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க மத்திய அரசாங்கம் முழு ஒத்துழைப்பையும் நல்க வேண்டும் என்று இத்தருணத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து புராதன சின்னமாக பேணிப் பாதுகாக்கப்பட்ட யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன்பாக அமைந்துள்ள பழைய பூங்கா தொகுதி, யுத்தம் முடிந்த கையோடு அபிவிருத்தி என்ற போர்வையில் அங்குள்ள பெறுமதி மிக்க பல நூறு வருடங்கள் பழமை வாய்ந்த மராமரங்கள் அழித்தொழிக்கப்பட்டு அங்கு மின்சார சபைக்கோர் கட்டடம், நில அளவைத் திணைக்களத்திற்கோர் கட்டடம், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் அலுவலகத்திற்கோர் கட்டடம் எனப் பல கட்டடங்கள் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. இங்கே காலாதிகாலமாக குடியிருந்த பறவைகள் வெளவால் போன்ற முலையூட்டிகள் எங்கு சென்றன என்பது பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் திருக்கேதீஸ்வரம் பகுதியில் காலாதிகலாமாக மாட்டு வண்டிச் சவாரி நடாத்தப்பட்ட மண்திடலில் இப்போது சவாரி நடாத்த அனுமதியில்லை. காரணம் அந்த இடம் பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட்டுவிட்டதாம். மாட்டு வண்டிச் சவாரியை குறிப்பிட்ட ஒரு நேர அளவினுள் கால அட்டவணையுள் நடாத்துவதன் மூலம் அங்குள்ள பறவைகளுக்கு இடைஞ்சல் ஏற்பட்டுவிடுமாம். ஆனால் பழைய பூங்காவை அபிவிருத்திப் பகடையாக்கியமை பாரதூரமான செயல் இல்லையாம். இதுதான் இன்றைய அரசியல் தந்திரோபாயம்.
எம்மைச் சுற்றி நடப்பதை விழிப்புடன் அவதானிக்க வேண்டிய ஒருகால கட்டத்தில் நாம் இருக்கின்றோம். கிறீஸ்தவ ஆலயங்களைச் செப்பனிட கிறிஸ்தவ அமைப்புக்கள் முன்வர வேண்டும். போர்த்துக்கேய, டச்சு, ஆங்கில அரசாங்கங்கள் கூட உதவி புரிய முன்வரலாம். இந்து மரபுரிமைச் சின்னங்களை எமது தென்னிந்திய சைவப் பாரம்பரியங்கள், மடங்கள், ஆதீனங்கள் ஏன் இந்திய அரசாங்கம் கூட பொறுப்பெடுத்து எமது வடமாகாணசபையுடன் கலந்தாலோசித்து இணைந்து புனருத்தாரணஞ் செய்யலாம். பழைமை பாதுகாக்கப்பட வேண்டும். பாரம்பரியங்கள் பொறுப்பேற்றுக் கண்காணிக்கப்பட வேண்டும். எமது சுற்றுலாத்துறை இதற்குரிய உதவியை நல்க முன்வரும்.
எனவே எமது வாழ்வியல் அடையாளங்களையும் மரபுரிமைகளையும் தென் பகுதியினரும் மத்திய அரசும் திட்டமிட்டு அழிக்க முயல்கின்ற போது நாம் ஒற்றுமையுடன் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க முன்வர வேண்டும். எம்மிடையே பிரிவுகள் எரிச்சல், புகைச்சல்கள் இருந்தால் அது எமக்குத் தீமையை விளைவிக்கும். நாம் வாளாதிருத்தல் வருத்தத்தை மட்டுமல்லாமல் எமது வரலாற்றின் வரைவிலக்கணத்தை மாற்றும் நிலையைத் தந்து விடும்.
இன்றைய இந்த “காலத்தின் விளிம்பு” புத்தக வெளியீடானது எமது மக்களின் அறிவுக் கண்ணைத் திறந்துவிடக்கூடிய ஒரு ஆரம்ப நிகழ்வாக அமையட்டும். இது போன்ற படைப்புக்கள் இன்னும் பல வெளிவரவேண்டும். அவற்றின் தாக்கத்தின் மூலம் எமது கலாச்சார அடையாளங்கள், வாழ்வியல் முறைமைகள்இ பழக்கவழக்கங்கள் ஆகியன பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டு பாடுபடுவோம் என வேண்டி நூலாசிரியருக்கு எனது பாராட்டுக்களை மீண்டுமொருமுறை தெரிவித்து எனது சிற்றுரையை இத்துடன் நிறைவு செய்கின்றேன்.
நன்றி.
வணக்கம்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்