வடக்கில் சிங்களக் குடியேற்றம் – கூட்டமைப்பு எதிர்ப்பு
நல்லிணக்கக் கிராமம் என்ற பெயரில், வடக்கில் படையினரைக் குடியமர்த்தி, சிங்களக் குடியேற்றங்களை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
வவுனியாவில் கொக்குவெளி என்று அழைக்கப்பட்டு வந்த தமிழ்க் கிராமம், கொக்கெலிய என்று பெயர் சிங்களத்தில் மாற்றப்பட்டு, அங்கு சிங்களக் குடியேற்றங்களும் அமைக்கப்பட்டிருந்தன.அந்தப் பகுதியில் புதிதாக சத்விருகம ( நல்லிணக்கக் கிராமம்) என்ற பெயரில், படையினருக்கான புதிய குடியிருப்புத் தொகுதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
படையினரால் அமைக்கப்பட்டுள்ள 51 வீடுகளைக் கொண்ட இந்தக் குடியிருப்புத் தொகுதியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் ஏப்ரல் 3ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளார்.இந்தத் திட்டத்துக்கு வடக்கு மாகாணசபையில் நேற்றுமுன்தினம் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரிய நிலத்தில் பெரும்பான்மைச் சிங்களவர்கள் அத்துமீறிக் குடியேற்றப்படுவதாக, வடக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சர்வேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தக் குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சின் மேலதிகச் செயலர் சரத் சந்திரசிறி விதான நிராகரித்துள்ளார்.
இது தனியார் காணியில் அமைக்கப்படவில்லை என்றும் அரச காணியிலேயே அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.சிங்களவர்களும், தமிழர்களும் குடியேற்றப்படும் உண்மையான நல்லிணக்க கிராமம் இது என்றும், இராணுவத்தில் தற்போது சேவையாற்றும் ஆறு தமிழ் பெண் படையினரின் குடும்பத்தினரும் இங்கு குடியேற்றப்படவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.
காணிகளை வழங்குவதில் எந்த இனப்பாகுபாடும் காட்டப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.