Breaking News

வடக்கு-கிழக்கில் மேலும் ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்படவுள்ளன

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக, அடுத்தவாரம் மேலும் 250 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கையொன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது-

‘வடக்கு, கிழக்கில் தேவையற்ற காணிகள் இருக்குமாயின் அவற்றை இனங்கண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான குழுவிடம் கேட்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கைக்கு அமைய, தேவையற்ற காணிகள் இருக்குமாயின் அதனை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானம் எடுப்பார்.

ஏற்கனவே சம்பூர் மற்றும் வலிகாமம் பகுதிகளில் காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் மீள்குடியேற்றப்படாதவர்களை, இவ்வருடத்திற்குள் உடனடியாக அவர்களது சொந்தக் கிராமங்களில் குடியேற்றுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

மீள்குடியேற்றம் தொடர்பில் பிரதேச செயலகங்கள் ஊடாக நாங்கள் தகவல்களைப் பெற்றுள்ளோம். அதற்கமையவே இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வசதிகளும் செய்து கொடுக்கப்படும். பிரதேச செயலகங்களில் தங்களைப் பதிவு செய்யாதவர்கள் இருந்தால், அவர்கள் நேரடியாக அமைச்சுக்கு வந்து பதிவுசெய்ய முடியும். யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்களின் குடும்பங்கள், தற்போது 3, 4 குடும்பங்களாக விருத்தியடைந்திருக்கலாம். அவர்களுக்காகவும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’ என குறிப்பிடப்பட்டுள்ளது.