Breaking News

கொடிகாமத்தில் இராணுவ வதை முகாம் : இரத்தக் கறைகளை கண்டதாக சாட்சி

கடந்த 2006ஆம் மற்றும் 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில், கொடிகாமல் புகையிரத நிலையப் பகுதியில் இராணுவ வதை முகாம் காணப்பட்டதாக, யுத்தத்தின்போது காணாமல் போன ஒருவரது தந்தை, ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்துள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் யாழ்.மாவட்டத்திற்கான மூன்றாம் கட்ட விசாரணை, கடந்த 27ஆம் திகதிமுதல் இன்றுவரை நடைபெற்றது. இன்றைய இறுதிநாள் விசாரணை, சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோது குறித்த தந்தை இவ் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

இராணுவத்தினர் தமது மகனை பிடித்துச்சென்ற பின்னர், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தன்னையும் அங்குள்ள சிவில் அலுவலகம் எனும் அலுவலகத்திற்கு வந்து வாரமொருமுறை கையெழுத்திட்டுச் செல்லுமாறு பணித்ததாக அவர் குறிப்பிட்டார். தம்முடன் பலர் அவ்வாறு கையெழுத்திட பணிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தாம் அவ்வாறு கையெழுத்திடச் சென்றபோது, அங்கு நிலத்தில் கூரான கற்கள் பதிக்கப்பட்டு, முற்கம்பிகள் வளைத்து வேயப்பட்டிருந்ததாக தெரிவித்த அவர், கடத்தப்படுபவர்கள் அவ் இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு வதைக்கப்படுவதாக தெரிவித்தார்.

அங்கு கொண்டுசெல்லப்படுபவர்களை குப்புற படுக்கவைத்து கால்களை இரும்புக் கம்பிகளுடன் பிணைத்து, அவர்கள் மீதேறி இராணுவ புலனாய்வாளர்கள் சப்பாத்துக் கால்களால் மிதிப்பதாகவும், அங்குள்ள கூரான கற்கள் மீது இரத்தக் கறைகளை தாம் கண்டதாகவும் குறித்த தந்தை தெரிவித்தார்.

யாழ்.கோப்பாய், வேலணை மற்றும் சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலகங்களில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கு மொத்தம் 772 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர்களில் 602 பேர் சாட்சியமளித்திருந்தனர். புதிதாக 206 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டு, அவற்றில் 21 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.