பிரபாகரன் இறந்தது எப்படி? கேள்வி எழுப்புமா கூட்டமைப்பு?
சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சர் சரத் பொன்சேகா, யுத்தம் நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்ட மே 19 அன்று, பிரபாகரன் உயிருடன் இருந்ததாக தெரிவித்திருக்கின்றார். 2009இல் யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அதுவரை ராஜபக்சேக்களின் உற்ற நண்பராக இருந்த பொன்சேகாவிற்கும் கோத்தபாய ராஜபக்சவிற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன.
அதிகாரத்தை அனுபவிப்பவர்கள் அவ் அதிகாரத்தை தீர்மானிப்பவர்களுடன் முரண்பட்டால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை பொன்சேகாவும் அனுபவிக்க நேர்ந்தது. பொன்சேகா தனது பதவிக்கு விசுவாசமாக செயற்பட்டிருக்கவில்லை என்னும் குற்றச்சாட்டின் கீழ், இராணுவ நீதிமன்றத்தினால் குற்றவாளியாக்கப்பட்டார். அவரது இராணுவ பதவி நிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் காலத்தில் பொன்சேகா யுத்தத்தின் இறுதிக்கட்டம் தொடர்பில் எதனையும் பேசியிருக்கவில்லை. தான் தலைமையேற்று வழிநடத்திய இராணுவம் யுத்தக் குற்றங்கள் எதிலும் ஈடுபட்டிருக்கவில்லை என்பதையே அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தார்.
இவ்வாறானதொரு சூழலில்தான் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. ஆட்சி மாற்றத்தின்போது பொன்சேகா மைத்திரிபாலவின் வெற்றிக்காக செயற்பட்டதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே! ஆனால் ஆட்சிமாற்றத்தின் பின்னர் பொன்சேகா நல்லாட்சிக்கான அரசாங்கம் என்றழைக்கப்படும் அரசாங்கத்தின் மீதும் குற்றங்காணும் ஒருவராகவே, தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
ஆட்சிமாற்றத்தின் பின்னர் பொன்சேகா பாதுகாப்புச் செயலராக வரக் கூடுமென்னும் எதிர்பார்ப்பும் நிலவியது. ஆனால் அதனை பொன்சேகா விரும்பவில்லை என்றும், இல்லை அவர் விரும்பியிருந்தார், ஆனால் அதில் மைத்திரிபால உடன்படவில்லை என்றவாறும் இருவேறுபட்ட அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. இதன் பின்னர் தேசிய அரசாங்கத்தின் மீதான ஒரு பார்வையாளராகவே பொன்சேகாவின் இடம் சுருங்கிப்போனது. இவ்வாறானதொரு பின்னணியில்தான் அவர் திடீரென்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டு, அதனூடாக அமைச்சுப் பொறுப்பு ஒன்றையும் ஏற்றிருக்கின்றார்.
பொன்சேகா 2010இல் மகிந்த ராஜபக்சவை வீழ்த்தக்கூடிய ஒருவர் என்னும் அடிப்படையிலேயே பொது எதிரணி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். அப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிற்கு போட்டியிடுவதற்கான விருப்பம் இருந்த போதிலும் கூட, மகிந்தவின் யுத்த வெற்றியலைக்கு முன்னால் ஈடுகொடுக்கக் கூடிய ஒருவராக ரணில் இருக்கவில்லை. இதன் காரணமாகவே, மகிந்தவை விழுத்துதல் என்னும் அடிப்படையில் பொன்சேகாவை ஐக்கிய தேசியக் கட்சி ஆதரித்தது. கூட்டமைப்பும் பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறு மக்களை கோரியிருந்தது. இது தொடர்பில் திருகோணமலையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசிய சம்பந்தன், இன்றைய சூழலில் மகிந்தவை தோற்கடிக்கக்கூடிய ஒரு வேட்பாளராக ரணிலையோ, கரு ஜெயசூரியவையோ கருத முடியாது.
அதற்கான தகுதி பொன்சேகா ஒருவருக்கே இருக்கிறது. எனவே இந்த வரலாற்று தருணத்தில் பொன்சேகாவிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டியது அவசியம் என்றவாறு தன்னுடைய நிலைப்பாட்டை நியாயப்படுத்தியிருந்தார். அதேவேளை பிறிதொரு உரையாடலில், பொன்சேகாவின் வெற்றியில் கூட்டமைப்பே கிங் மேக்கராக இருக்கும் என்றவாறும் தெரிவித்திருந்தார். இறுதியில் கூட்டமைப்பு அதில் ஜோக்கராகியது என்பதே உண்மை.
பொன்சேகாவை விடவும் 18 இலட்சம் அதிக வாக்குகளால் மகிந்த வெற்றியீட்டியதன் மூலம் தெற்கில் தன்னை வீழ்த்த எவருமில்லை என்றவாறானதொரு அரசியல் சூழல் உருப்பெற்றது. ஆனால், எனது பார்வையில் அது பொன்சேகாவின் வெற்றியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தேர்தல் அல்ல, மாறாக தெற்கை படிப்பதற்கும் மகிந்த அலையின் தன்மையை புரிந்து கொள்வதற்குமான ஒரு தேர்தல் பாடம் மட்டுமே! இந்தப் பாடத்தின் மூலம் கற்றுக் கொண்டதைக் கொண்டே 2015இற்கான திட்டங்கள் தீட்டப்பட்டிருக்க வேண்டும்.
2010 இலும் சரி, 2015இலும் சரி சம்பந்தன் தொடர்பான தேர்தல் பாடம் ஒன்றே. அதாவது, அவர் தமிழர்களை ஒரு சோதனைக்கூட எலியாக பயன்படுத்த ஒரு போதும் தயங்காதவர். அவரை நம்பலாம். இதற்கு மேல் இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுவதற்குரிய கட்டுரையல்ல இது. அவ்வாறாயின் இந்த இடத்தில் ஏன் இது எடுத்தாளப்பட வேண்டும் என்னும் கேள்வி எழலாம்.
பொன்சேகா 2010இல் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்டிருந்த போதிலும் கூட, தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவில்லை. தன்னுடைய அரசியல் இயங்குதளத்திற்கென புதியதொரு அரசியல் கட்சியையே உருவாக்கியிருந்தார். மேலும் எதிர்பார்த்தது போன்று தெற்கின் அரசியல் தளத்தில் ஓர் அதிர்வலையை ஏற்படுத்தக் கூடிய ஒரு ஆளுமையாகவும் கூட அவரால் பிரகாசிக்க முடியவில்லை. ஆனால் அன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதை தவிர்த்திருந்த பொன்சோகா இன்று திடீரென்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டிருக்கின்றார். இதன் பின்புலம் என்னவாக இருக்கலாம்?
பொன்சேகா அமைச்சராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அவர் வெளியிட்டு வரும் அபிப்பிராயங்களை உற்று நோக்கினால் அதற்குள்ளால் ஒரு நிகழ்ச்சி நிரல் தலைநீட்டிக் கொண்டிருப்பதை காணலாம். கோத்தபாய ராஜபக்சவே அந்த நிகழ்ச்சிநிரலின் இலக்கு. பொன்சேகாவின் நாடாளுமன்ற உரைகளிலும் சரி, ஊடகங்களுக்கு அவர் தெரிவித்துவரும் அபிப்பிராயங்களிலும் சரி, இந்த விடயமே மேலோங்கியிருக்கிறது. இவ்வாறனதொரு சூழலில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், யுத்தம் முடிவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட போது உயிருடன் இருந்தார் என்னும் சர்ச்சைக்குரிய தகவலொன்றை பொன்சேகா வெளியிட்டிருக்கின்றார். இதன் மூலம் பொன்சேகா கூற முற்படுவது என்ன? அதனை யாருக்காக கூறுகின்றார்? பொன்சேகா கூறுவது உண்மையாயின் அதன் பின்னர் பிரபாகரன் எவ்வாறு இறந்தார் என்னும் உண்மையும் அவருக்கு நிச்சயம் தெரிந்துதானே இருக்கும்? அந்த உண்மை என்ன?
ஆட்சிமாற்றத்தின் பின்னரான நாடாளுமன்ற அமர்வுகளின் போது ஒரு விடயத்தை தெளிவாக அவதானிக்க முடிகிறது. அதாவது, நாடாளுமன்றத்தில் அரசாங்க தரப்பினரால் கூறப்படுகின்ற எந்தவொரு விடயத்தின் மீதான கேள்விகளையோ அல்லது விமர்சனங்களையோ கூட்டமைப்பு, முக்கியமாக சம்பந்தன் முன்வைப்பதில்லை. இது ஒருவகையில் கூட்டமைப்பும் நிபந்தனையற்ற வகையில் அரசாங்கத்தின் அனைத்து இழுப்புக்களுக்கும் இசைந்து கொடுக்கின்றதா என்று ஒருவர் கேள்வி எழுப்பினால், அவருக்கு இல்லை என்று பதிலளிப்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கும்.
அண்மையில் ஒரு புலம்பெயர் ஆய்வாளருடன் பேசிக்கொண்டிருக்கும் போது, கூட்டமைப்பு தன்னை ஒரு அரசியல் தரப்பாக கருதுகிறதா அல்லது வெறும் நாடாளுமன்ற அரசியல் கூட்டாக கருதுகிறதா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு நேர்மையாக பதிலளிப்பதாயின், ஆட்சிமாற்றத்தின் பின்னர் கூட்டமைப்பு ஓரளவு தன்னிடமிருந்த ஒரு தரப்பு என்னும் தகுதிநிலையை பெருமளவிற்கு இழந்துவிட்டது என்றே பதிலளிக்க வேண்டும். இதற்கு சம்பந்தன் கூட்டமைப்பை ஒரு அரசியல் கூட்டாக நடத்தாமல் வெறும் தன்னிலை நிலைப்பாடுகளுக்கான களமாக பயன்படுத்தி வருவதே முக்கிய காரணம். இதற்கான கூட்டுப் பொறுப்பை கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து கட்சியின் தலைமைகளுமே ஏற்க வேண்டும்.
இன்று பொன்சேகாவால் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற நாடாளுமன்றத்தில், யுத்தம் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் பிரபாகரன் உயிருடன் இருந்தார் என்று சொல்ல முடிகிறது என்றால், இதனை இடைமறித்து கேள்வி எழுப்ப ஏன் சம்பந்தனால் முடியவில்லை. அவ்வாறாயின் பிரபாகரன் எவ்வாறு இறந்தார்? யுத்தத்திற்கு நானே தலைமை தாங்கினேன் என்று மார் தட்டும் பொன்சேகாவின் பொறுப்பு என்ன? ஒரு புறம் ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் நம்பகமான விசாரணை அவசியம் என்று கூறிவருகின்ற சூழலில்தான் பொன்சேகா இவ்வாறானதொரு கருத்தை துணிந்து வெளியிட்டிருக்கின்றார்.
அந்த நம்பகமான விசாரணையின் கீழ் பிரபாகரனின் மரணமும் இடம்பெற வேண்டுமென்று சம்பந்தனால் ஏன் துணிந்து கூற முடியவில்லை? இறுதி யுத்தத்தின் போது நிகழ்ந்ததாக நம்பப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை அவசியம் என்பதுதான் சம்பந்தனின் நிலைப்பாடு என்றால் அந்த விசாரணையில் பிரபாகரனின் மரணமும் விசாரிக்கப்பட வேண்டுமென்று கூறுவதில் சம்பந்தன் ஏன் தடுமாற வேண்டும்?
இதில் இன்னும் வேடிக்கை என்னவென்றால் இதே நாடாளுமன்றத்தில் பிரபாகரன்தான் என்னுடைய தலைவன் என்று கூறி அவருக்கு அஞ்சலி செலுத்திய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரின் வீரத்திற்கு என்ன நிகழ்ந்தது? இல்லாவிட்டால் இவர்கள் பிரபாகரன் தொடர்பில் இதுவரை பேசி வந்ததெல்லாம் தமிழ் மக்களின் வாக்குளை இலக்கு வைத்துத்தானா?