வடக்கில் 1608 குடும்பங்கள் தொடர்ந்தும் அகதி முகாம்களில்
வடக்கில் இதுவரை 12 ஆயிரத்து 681 குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்து 15 பேர் இதுவரை மீள்குடியேற்றப்படாதுள்ளதாக வடமாகாண புனர்வாழ்வு அமைச்சு தெரிவித்துள்ளது.
வடக்கின் 5 மாவட்டங்களினதும் அரச அதிபர்களின் ஊடாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் வடக்கில் இதுவரை 1 இலட்சத்து 58 ஆயிரத்து 182 குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து 24 ஆயிரத்து 944 பேர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் யாழ்ப்பாணத்தில் 39 ஆயிரத்து 845 குடும்பங்களும், மன்னாரில் 26 ஆயிரத்து 390 குடும்பங்களும், வவுனியாவில் 16 ஆயிரத்து 862 குடும்பங்களும், கிளிநொச்சியில் 41 ஆயிரத்து 862 குடும்பங்களும், முல்லைத்தீவில் 41 ஆயிரத்து 322 குடும்பங்களும் மீள்குடியேற்றப்பட்டுள்ளன.
இவை தவிர அகதிமுகாம்களில் தற்போது ஆயிரத்து 608 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரத்து 732 பேர் தங்கியுள்ளனர்.
இதில் யாழ்ப்பாணத்தில் 1318 குடும்பங்களைச் சேர்ந்த நான்காயிரத்து 737 பேரும், வவுனியா மாவட்டத்தில் 290 குடும்பங்களைச் சேர்ந்த 995 பேரும் வாழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று உறவினர்கள் நண்பர்களுடன் வாழும் குடும்பங்களும் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதாகவும் மொத்தமாக 11 ஆயிரத்து 73 குடும்பங்களைச் சேர்ந்த 38 ஆயிரத்து 283 பேர் இவ்வாறு வசிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே மொத்தமாக 12 ஆயிரத்து 681 குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்து 15 பேர் இதுவரை மீள்குடியேற்றப்படாமல் இருப்பதாக வடமாகாண புனர்வாழ்வு அமைச்சு வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.