பாடசாலை மாணவி வல்லுறவு வழக்கில் எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை
14 வயது பாடசாலை மாணவியைக் கடத்தி பாலியல் வல்லுறவு புரிந்து, அவரைப் பெண் குழந்தை ஒன்றுக்குத் தாயாக்கிய வழக்கில், எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறையும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 லட்ச ரூபா நஷ்டயீடு செலுத்துமாறும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி இந்த வல்லுறவு சம்பவம் நடைபெற்றது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் 14 வயது பாடசாலை மாணவியாக இருந்தார். அவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய எதிரி 62 வயதுடைய வயோதிபதாக இருந்தார்.
இந்த வழக்கில், 16 வயதுக்குக் குறைந்த பாடசாலை மாணவியைக் கடத்தியமை, அவருடன் பாலியல் வல்லுறவு கொண்டமை என்ற இரண்டு குற்றச்சாட்டுக்கள் கந்தையா சித்திவிநாயகம் என்ற வயோதிபருக்கு எதிராக சட்டமா அதிபரினால் சுமத்தப்பட்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், வழக்குத் தொடுனர் தரப்பில் பெண் அரச சட்டத்தரணி சுகந்தி கந்தசாமி சாட்சிகளை நெறிப்படுத்தினார். அப்போது, பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றில் சாட்சியமளித்தார். சம்பவம் நடைபெற்ற தினம் தனக்கு 14 வயது என்றும் வடமராட்சி பாடசாலையொன்றில் படித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.