தமிழக முகாமில் 14 இலங்கையர்கள் உண்ணாவிரதம்
தமிழகத்தின் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்கள் 14 பேர் காலவரையரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த முகாமில் தற்போது 16 இலங்கைத் தமிழர்கள், ஒரு நைஜீரியர் என 17 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் மகேந்திரன் என்ற இலங்கைத் தமிழர், தன்னை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி காலவரையரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். 3-வது நாளாக நேற்றும் அவரது போராட்டம் தொடர்ந்தது.
இந்தநிலையில், பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி, இதே முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 13 பேர் நேற்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
தகவலறிந்த கியூ பிரிவு டிஎஸ்பி பால்வண்ணநாதன், முகாம்களுக்கான தனித்துணை ஆட்சியர் நடராஜன் உள்ளிட்டோர் அங்கு சென்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், அவர்கள் அளித்த கடிதத்தை அரசுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
எனினும், அதை ஏற்க மறுத்து, 14 பேரும் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர் என, இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.