பொறுப்புக்கூறலை அவதானிப்பதே ஐ.நா ஆணையாளரின் பிரதான நோக்கம்
உண்மையானதும் நிரந்தரமானதுமான அரசியல் தீர்வே உண்மையான நல்லிணக்கமாக அமையுமென, ஐ.நா ஆணையாளர் செயிட் அல் ஹூசைனுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார்.
இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் சந்தித்தனர். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
இச் சந்திப்பில் வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவித்தல், மீள்குடியேற்றம், காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பேசப்பட்டதாகவும், குறித்த சந்திப்பு திருப்திகரமாக அமைந்ததாகவும் சம்பந்தன் மேலும் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, வடக்கில் விரைவில் மீள்குடியேற்றம் செய்வதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் அதுகுறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாகவும் ஐ.நா ஆணையாளர் குறிப்பிட்டதாக சம்பந்தன் இதன்போது குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கை குறித்து ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கையில் செயற்படுத்தப்படும் விதம் குறித்து கண்காணிக்கவே தாம் இலங்கை வந்ததாக, ஐ.நா ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவித்தார் என சம்பந்தன் குறிப்பிட்டார்.