உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கைதிகளின் போராட்டம் இடைநிறுத்தம்
அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இருவரும் போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளனர்.
கடந்த 6 நாட்களாக அனுராதபுர சிறைச்சாலையில் சுலக்ஷன், தர்ஷன் ஆகிய இரு அரசியல் கைதிகள் சாகும்வரையிலான உண்ணவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தமிழ் அரசியல் கைதிகள் இருவரையும் இன்று சனிக்கிழமை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சென்று பார்வையிட்டார்.
எதிர்வரும் திங்கட்கிழமை வவுனியா உயர் நீதிமன்றத்தினால் தீர்வு எட்டப்படும் என சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஸ்ட சட்டத்தரணி நவாவி ஊடாக, கைதிகளின் சட்டத்தரணியான அன்ரன் புனிதநாயகத்தின் வாக்குறுதிக்கு அமைவாக உண்ணாவிரத போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளனர்.
இதேவேளை ஏனைய தமிழ் அரசியல் கைதிகளும் தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு போராடவேண்டும் என வலியுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.