வடக்கு, கிழக்கு இணைப்பும் சமஷ்டித் தீர்வும் அவசியம் - திருமலை மாவட்ட சிவில் அமைப்பு
புதிய அரசியலமைப்பின் சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வொன்றின் மூலமே தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வைக் காணமுடியும். வடகிழக்கு இணைப்பை எல்லாவற்றுக்கும் மேலான கோரிக்கையாகவும் முன்வைக்கி றோம் என்று திருகோணமலை மாவட்ட சிவில் அமைப்பின் சார்பில் அருட்தந்தை.வி.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மீதான பொதுமக்கள் கருத்தறியும் குழுவினரின் கருத்துப் பெறுகை நேற்றைய தினம் திருகோணமலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது திருகோணமலை மாவட்ட சிவில் அமைப்பின் சார் பில் குழுமுன் பிரசன்னமாகி யோசனை முன்வைக்கையிலேயே யோகேஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இந்த நாடு நீண்டகாலமாகவே பன்மத்துவ தன்மை கொண்டநாடு என்பது மறக்கப்பட்டு தனியொரு இனத்துவ நாடாக போற்றப்பட்டு வந்திருக்கிறது. இந்நிலை அரசியல் சாசனத்தின் மூலம் மாற்றப்பட்டு இலங்கையொரு பன்மத்துவ இனமொழி கலாசாரப் பாரம்பரியங்கள் கொண்ட நாடு என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமை ஏற்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு வடக்கு கிழக்கு சாசன ரீதியாக இணைக்கப்பட்டு சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வொன்றை உருவாக்குவதன் மூலமே அரசியல் பிரச்சினைக்கான தீர்வொன்றைக் கொண்டுவரமுடியும். இதில் குறிப்பாக திருகோணமலை மாவட்டம் மிகவும் கவனத்துக்கு உள்ளாகும் மாவட்டமென்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
எமது சிவில் அமைப்பின் பல்வேறு கலந்துரையாடல்களை ஜனநாயக முறையில் நாம் நடாத்தியிருக்கிறோம். அனைவரது ஒருமித்த கருத்தாக மேற்கூறிய எண்ணக் கருக்கள் ஆர்வமாக எமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நாட்டிலுள்ள தனியொரு இனம் விசேட உரிமைகளை வசதிகளையும் அனுபவிப்பது நீக்கப்பட்டு சகல இனங்களும் எல்லாவகையிலும் சமஉரிமை வாய்ப்பு சலுகைகளை அனுபவிக்கும் சமதன்மைப் போக்கு சாசனத்தின் மூலம் உருவாக்கப்பட வேண்டும்.
இலங்கை ஜனாதிபதியைப் பொறுத்தவரை அவர் ஒரு சம்பிரதாயபூர்வமான தலைவராக இருக்க முடியுமே தவிர நிறைவேற்று அதிகாரம் கொண்டவராக இருக்க முடியாது. பாராளுமன்றம் வலுவுடையதாகவும் அதன் தலைவரான பிரதமர் நிறைவேற்று அதிகாரம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். ஏலவே சோல்பரி யாப்பில் இருந்த நிலைபோன்ற முறைமை கொண்டு வரப்படவேண்டும் என்றார்.
திருகோணமலை மாவட்ட பாதிக்கப்பட்ட மாணவர் நிதியத்தின் ஸ்தாபக தலைவரும் பிரபல எழுத்தாளருமாகிய கனகசபை தேவகடாட்சம் தனது ஆலோசனையை முன்வைக்கும் போது குறிப்பிடுகையில்,
சமூகங்களுக்கிடையே சமூக ஒப்பந்தமொன்று கொண்டுவரப்பட வேண்டும். தமிழ் மக்களுடைய தனித்துவம் சுயநிர்ணய உரிமை ஏற்றுக் கொள்ளப்படுவதுடன் அரசியல் சாசன வடிவிலும் அது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அத்துமீறிய மதப்பிரவேசங்கள் காரணமாகவே இந்நாட்டில் பாரிய மோதல்களும் மதத்துவ இனத்துவ முரண்பாடுகளும் ஏற்பட்டன. ஒரு மதத்தை முன்னிலைப்படுத்தி ஏனைய மதங்களை புறந்தள்ளும் வேறுபாடுகள் முற்றாக ஒழிக்கப்பட்டு சமதன்மையான மதப்பெறுமதிகள் ஒவ்வொரு மதத்துக்கும் அரசியல் சாசனத்தினூடாக வழங்கப்பட வேண்டும்.
சோல்பரி யாப்பில் சிறுபான்மையினத்துக்கு பாதுகாப்பு அளித்த 29 ஆவது ஷரத்து காணப்பட்டதை கடந்த பல தசாப்தகாலமாக சிறுபான்மை சமூகம் அனுபவித்த கொடுமைகளுக்கு விடிவு காணப்பட வேண்டுமாயின் மீண்டும் 29 ஆவது ஷரத்து போன்றவை புதிய அரசியல் சாசனத்தில் உருவாக்கப்பட வேண்டுமென என்றார்.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தனது கருத்துக்களை வெ ளிப்படுத்துகையில், முஸ்லிம் மக்கள் தமிழ்ப் பேசுகின்றார்கள் என்பதற்காக தமிழ்ப் பேசும் இனம் என அடையாளப்படுத்துவதைத் தவிர்த்துக் கொண்டு முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் தனித்துவமான ஓர் இனமென அரசியல் சாசனரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
சமய அனுட்டானங்கள் மூலம் நாம் வேறு ஒரு மதத்தைப் பின்பற்றுகின்றவர்கள் என்பதனாலேயே முஸ்லிம் மக்கள் தனித்துவமான இனம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம்.
இந்நாட்டில் 10.3 வீத முஸ்லிம் மக்கள் தேசிய ரீதியில் வாழ்ந்தும் கூட 22 உறுப்பினர்களே நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யும் வாய்ப்புள்ளது. எனவே தான் இன விகிதாசாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டு முஸ்லிம் மக்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படும் வாய்ப்பை புதிய அரசியல் சாசனத்தினூடாக உறுதிசெய்ய வேண்டும்.
திருகோணமலைப் பிராந்தியத்திலும் முஸ்லிம் தமிழ் பிரதிநிதித்துவம் பாராளுமன்றம் மற்றும் உள்ளூராட்சி அமைப்புக்களிலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றார்.
திருகோணமலை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் கொன்சற்றோறியத் தலைவர் ரி.தவசலிங்கம் கருத்தை வெளியிடுகையில், வட கிழக்குப் பிரதேசம் ஒரு முழுமையான பிராந்தியமாக இணைக்கப்பட வேண்டும். இந்தப் பிராந்தியத்தின் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் முழுமையாக பிராந்தியங்களுக்கு கையளிக்கப்பட வேண்டும். மத்திய அரசானது தனது அதிகாரங்களை பிராந்தியங்களுக்கு கையளிப்பதன் மூலமே அதிகாரப்பரவலாக்கல் என்பது சிறந்த முறையில் இருக்க முடியும். பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதுடன் இப்பிரதேசங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமென என்றார்.
அகில இலங்கை தமிழ் மகா சபையின் சார்பில் முன்மொழிவுகளை எழுத்துருவில் சமர்ப்பித்த கா.விக்னேஷ்வரன் யோசனை முன்வைக்கையில்,
இலங்கை ஐந்து பிராந்தியங்களாக இணைக்கப்பட்டு, வட கிழக்கு ஒரு பிராந்தியமாகக் கொண்டுவரப்படுவதுடன் சமஷ்டி அல்லது சமஷ்டி என்ற வார்த்தைப்பிரயோகம் அற்ற இரட்டை ஆட்சிமுறை புதிய அரசியல் சாசனத்தின் மூலம் கொண்டுவரப்பட வேண்டும்.
இந்த நாட்டின் பாரிய நெருக்கடி நிலைகளை உருவாக்கிய ஜனாதிபதி முறையும் அதன் அதிகாரங்களும் நீக்கப்பட்டு சிறுபான்மைச் சமூகத்தின் நலன் பேணும் வகையில் செனட் சபை கொண்டுவரப்பட வேண்டும். பாராளுமன்ற முறையின் வலு அதிகரிக்கப்படுவதுடன் அதன் அங்கத்தவர் தொகை 225 க்கு அதிகமாக கொண்டுவரக்கூடாது. இதில் 160 தேர்தல் தொகுதிவாரியாகவும் 65 உறுப்பினர்கள் மாவட்டப் பிரதிநிதித்துவமாக இருக்கவேண்டும். தேசிய பட்டியல் முறை ஒழிக்கப்பட வேண்டும். அரசியல் நீதிமன்றமொன்று பிராந்தியங்களில் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.