சிரியாவில் வார இறுதியில் யுத்த நிறுத்தம்! அமெரிக்கா, ரஷ்யா அறிவிப்பு
சிரியாவில் மோதல்களை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக எதிர்வரும் 27 ஆம் திகதி சனிக்கிழமை முதல் யுத்த நிறுத்தமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக அமெரிக்காவும் ரஷ்யாவும் அறிவித்துள்ளன.
எனினும் மேற்படி யுத்த நிறுத்த உடன்படிக்கையில் ஐ.எஸ். தீவிரவாதிகளும் அல் கொய்தாவுடன் தொடர்புடைய அல் நுஸ்ராவும் உள்வாங்கப்படவில்லை என அமெரிக்காவாலும் ரஷ்யாவாலும் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அதிகார சக்திகள் ஒரு வாரத்துக்குள் யுத்த நிறுத்த உடன்படிக்கையொன்றை நடைமுறைப்படுத்த கடந்த 12 ஆம் திகதி இணக்கம் கண்டிருந்தனர். எனினும் அவர்களால் குறிப்பிடப்பட்டிருந்த காலக்கெடு காலாவதியாகியுள்ள நிலையில் தற்போது அந்த உடன்படிக்கை தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. எனினும் இந்த உடன்படிக்கை சம்பந்தமாக சம்பந்தப்பட்டவர்களிடையே தொடர்ந்து அவநம்பிக்கை நிலவுவதாக கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹொம்ஸ் மற்றும் டமஸ்கஸ் பிராந்தியத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் 190 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர்.
2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிரியா வில் மோதல்கள் ஆரம்பமானது முதற்கொண்டு அந்நாட்டில் 250,000 க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
சிரியாவிலான உயிரிழப்புகளை தடுத்து நிறுத்தவேண்டிய அவசியம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் தொலைபேசி மூலம் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்தது.
அந்தத் தொலைபேசி உரையாடலையடுத்து அமெரிக்காவாலும் ரஷ்யாவாலும் இணைந்து அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
சிரியாவில் மோதல்களில் ஈடுபட்டுள்ள தரப்பினர் இந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த இணங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் ஐக்கிய நாடுகள் சபையால் தீவிரவாத அமைப்புகளாக குறிப்பிடப்பட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாத குழு மற்றும் அல் நுஸ்ரா என்பன இந்த உடன்படிக்கையில் உள்வாங்கப்படவில்லை எனவும் அந்தக் குழுக்களுக்கு எதிராக ரஷ்யாவாலும் அமெரிக்கா தலைமையிலான கூட்டமைப்பாலும் நடத்தப்படும் வான் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெறும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் மோதல்களில் ஈடுபட்டுள்ள எதிர் ஆயுதக் குழுக்கள் தாம் இந்த போர் நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதை எதிர்வரும் 26 ஆம் திகதி நண்பகலுக்குள் உறுதிப்படுத்த வேண்டியுள்ளதாக அந்த அறிக்கை யில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த எதிர்க் குழுக்கள் மீதான வான் தாக்குதல்களை அமெரிக்காவும் ரஷ்யாவும் நிறுத்தவுள்ளன.
மேற்படி உடன்படிக்கையின் பிரகாரம் யுத்த நிறுத்தம் மீறப்படும் பட்சத்தில் அது தொடர்பில் கண்காணிப்பு குழுவுக்கு அறிவிக்க விசேட தொடர்பாடல் வசதிகள் செயற்படுத்தப்படவுள்ளன.
இந்நிலையில் சிரியாவின் பிரதான எதிர்க் குழுவான 'உயர் பேச்சுவார்த்தைகள் சபை' கூறுகையில், தான் இந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொள்வதாகவும் ஆனால் இது தொடர்பான தமது அர்ப்பணிப்பு முற்றுகைகளை நீக்குதல், பொதுமக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துதல், கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் உதவி விநியோகம் உள்ளடங்கலான நிபந்தனைகளில் தங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி மேற்படி உடன்படிக்கைக்கு வரவேற்பளித்துள்ளார்.
இந்த யுத்த நிறுத்தம் சிரியாவில் இடம்பெற்றுவரும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவது மட்டுமல்லாமல் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களிலுள்ள மக் களுக்கான மனிதாபிமான உதவிகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதையும் நோக்காகக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த யுத்த நிறுத்தத்தை தமக்குச் சாதக மாகப் பயன்படுத்தி தீவிரவாதிகள் முன் னேறமாட்டார்களாயின் அதனை அமுல் படுத்த தான் தயாராகவுள்ளதாக சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாத் ஏற்கனவே கடந்த சனிக்கிழமை அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சிரிய அரசாங்கப் படை யினர் ரஷ்யாவின் வான் தாக்குதல்களின் துணையுடன் வட நகரான அலெப்போவைச் சூழ்ந்து நிலைகொண்டுள்ள கிளர்ச்சியா ளர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.