Breaking News

இலங்கையின் வெற்றிக்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது - ஜோன் கெரி

இலங்கையில் ஜனநாயகத்தின் வெற்றிக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருவதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டுக்கான இராஜாங்கத் திணைக்களத்துக்கான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டு யோசனை தொடர்பாக, அமெரிக்க செனட்டின் வெளிவிவகாரக் குழு முன்பாக நேற்று விளக்கமளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும், பர்மாவிலும், ஜனநாயகத்தின் வெற்றிக்கு அமெரிக்கா உதவி வருவதாக ஜோன் கெரி இதன்போது தெரிவித்துள்ளார்.2016-2017ஆம் நிதியாண்டில்,இலங்கைக்கு 31 மில்லியன் டொலர் நிதியுதவிகளை வழங்க அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தார்.

அமெரிக்காவின் இந்த நிதியுதவி,2017ஆம் நிதியாண்டில் ஆட்சியை வலுப்படுத்தல், ஜனநாயக மறுசீரமைப்பு. மற்றும் சட்டம் ஒழுங்கை ஊக்குவித்தல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல், நீதித்துறை நிறுவனங்களை வலுப்படுத்தல், மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கு ஆதரவளித்தல் என்பனவற்றுக்குச் செலவிடப்படும்.

அத்துடன், இந்த வளங்கள் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் முயற்சிகள், ஊழல் ஒழிப்பு செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படும் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.