Breaking News

பயங்கரவாத தடைச்சட்டம் தவறானால்: அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்

மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை கவிழ்க்கவே தமிழ் மக்களின் பிரச்சினையை சர்வதேசம் ஒரு கருவியாக பயன்படுத்தியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் சர்வதேச நாடுகளிடம் இருந்து கிடைக்காத உதவி மைத்திரிபாலவின் ஆட்சியில் கிடைப்பது தொடர்பாக தொலைக்காட்சி ஊடகமொன்று வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

சர்வதேச நாடுகள் ஸ்ரீலங்காவிற்கு உதவிசெய்ய தயாராக உள்ளதாக தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கொடுக்காத ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு சர்வதேசம் நிதி உதவி வழங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலின்போதும் நிபந்தனைகளுடன் மட்டுமே நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவேண்டும் என தமது கட்சி மக்களிடம் வலியுறுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்குப் பயணித்த ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் செய்த் ரா-அத் அல் ஹூஸைனின் அரசியல் கைதிகள் தொடர்பிலான கருத்தில் நியாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த செப்ரொம்பர் மாதம் இடம்பெற்ற ஜ.நா மனித உரிமைச் சபையின் தீர்மானத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் கொடூரமானது எனவும், இந்த சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற விடயத்திற்கு ஸ்ரீலங்காவும் இணக்கம் தெரிவித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாக குறிப்பிட்ட அவர், தவறான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளை எந்தவிதமாகன நிபந்தனையும் இன்றி விடுதலைசெய்யவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.