தமிழர்களின் மனதை வெல்ல பாடுபடுவேன் - ரெஜினோல்ட் குரே
தமிழர்களின் மனதை வென்று, அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு தன்னாலான சகல பங்களிப்புகளையும் வழங்கவுள்ளதாக வட மாகாணத்தின் புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
வட மாகாண ஆளுநராக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி மைத்திரி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட ரெஜினோல்ட் குரே, அதனையடுத்து ஊடகமொன்றிற்கு இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தால் யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தபோதும், தமிழர்களின் மனதை வெல்ல முடியாமல் போனதாக சுட்டிக்காட்டிய ரெஜினோல்ட் குரே, கடந்த காலத்தில் வடக்கில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளில் தென்னிலங்கை வர்த்தகர்களும் ஒப்பந்தக்காரர்களுமே அதிகளவாக ஈடுபடுத்தப்பட்டதாக இதன்போது சுட்டிக்காட்டினார். குறித்த நடவடிக்கையில் வட பகுதி மக்களையும் இணைத்துக்கொண்டு செயற்பட்டிருத்தல் அவசியமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடபகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள மக்களது காணிகளை விடுவித்து, ஆறு மாதங்களுக்குள் மக்களிடம் கையளிப்பதாக ஜனாதிபதி மைத்திரி தெரிவித்துள்ள நிலையில், குறித்த செயற்றிட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.
ரெஜினோல்ட் குரே, வட மாகாண ஆளுநராக நாளைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.