உள்ளக விசாரணைக்கும் சர்வதேச உதவி தேவை
இலங்கை உள்ளக விசாரணைப் பொறிமுறைகளை கையாண்டாலும் எமக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாகின்றது. சர்வதேசத்தை இணைத்துக்கொண்டு இலங்கையின் சிக்கல்களை மாற்றியமைப்பதே சாதகமான வகையில் அமையும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் விஜயம் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே அமையுமென நம்புவதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதிய நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர் பில் உண்மை நிலைமைகளை வெளிப்படுத்தாவிடின் எமது அடுத்தகட்ட நகர்வுகள் மிகவும் கடினமானதாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கைக்கான விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் நேற்றுமுன்தினம் வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களையும் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளையும் சந்தித்துள்ளமை தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்ட வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை இலங்கையின் இப்போதைய நிலையில் மிகவும் ஆரோக்கியமானதாக அமைந்துள்ளது என்றே கருதுகின்றோம். அவரின் வருகையை இலங்கை அரசாங்கம் வரவேற்கின்றது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதிய நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் உண்மை நிலைமைகளை வெளிப்படுத்தாவிடின் எமது அடுத்தகட்ட நகர்வுகள் மிகவும் கடினமானதாக அமையும். எனவே இப்போது இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதானது நல்லதொரு செயற்பாடாக அமைந்துள்ளது.
அதேபோல் இந்த நல்லாட்சி அரசாங்கம் தனது ஒரு வருட கால எல்லையில் எவ்வாறான நகர்வு களை ஜனநாயக ரீதியில் முன்னெடுத்துள்ளது? வடக்கு, கிழக்கில் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது என்பதை அவர் நேரடியாக பார்வையிட்டுள்ளமையை நல்லதொரு விடயமாகவே கருதுகிறோம்.
அதேபோல் வடக்கு, கிழக்குக்கு அவர் நேற்று விஜயம் மேற்கொண்டு பொதுமக்களையும் சிவில் அமைப்புகளையும் மற்றும் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளையும் சந்தித்துள்ளார். இன்றும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சிவில் அமைப்புகள், எதிர்க்கட்சி உறுப்பினர்களை சந்திப்பார். ஆகவே நாட்டில் பலதரப்பட்ட சமூக பிரதிநிதிகளையும் அவர் சந்தித்து பூரணமான தெளிவுடனேயே இலங்கையில் இருந்து அவர் பயணிப்பார். ஆகவே இந்த விஜயத்தின் போது தற்போதைய நல்லாட்சியின் நிலைமைகளை அவரால் உணர முடியும் என நாம் நம்புகிறோம்.
எனினும் இப்போது அவரது வருகையானது இலங்கையின் உள்ளக விசாரணைப் பொறிமுறையை தவிர்த்து சர்வதேச விசாரணையை பலப்படுத்தும் வகையில் அமையும் என நாம் நம்பவில்லை. மாறாக இலங்கையின் செயற்பாடுகளில் சர்வதேச ஒத்துழைப்புகளை வழங்கும் வகையில் தனது ஒத்துழைப்புகளை வழங்குவார் என நாம் நம்புகின்றோம். இலங்கை உள்ளக விசாரணைப் பொறிமுறைகளை கையாண்டாலும் எமக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாகின்றது. சர்வதேசத்தை இணைத்துக்கொண்டு இலங்கையின் சிக்கல்களை மாற்றியமைப்பதே சாதகமான வகையில் அமையும்.
கேள்வி:- காணாமல்போனோர் மற்றும் கடத்தப்பட் டோர் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள் ளது. அதே போல் நில அபகரிப்பு மற்றும் இராணுவ ஆக்கிரமிப்புகள் தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித் துள்ளனர். இந்தவிடயங்களில் சர்வதேசம் தொடர்ந் தும் அழுத்தம் கொடுக்கும் நிலைமை உள்ளதே?
பதில்:- ஆம், மக்கள் இந்த விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம் தெரிவித்துள்ளனர். காணாமல்போனோர் மற் றும் மக்களின் நில அபகரிப்பு தொடர்பில் அவர் கள் குறிப்பிட்டாலும் காணிகளை அவர்களிடம் ஒப்படைக்கும் அனைத்துக்கட்ட நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. வடக்கிலும், கிழக்கிலும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் நாம் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றோம். ஆனால் காணாமல்போனோர் தொடர்பில் எமது நடவடிக்கைகளில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது என்பது உண்மையேயாகும். எனினும் நாம் பின்னிற்கவில்லை. உள்ளகப் பொறிமுறைகள் மூலமாக வெகுவிரைவில் பிரச்சி னைகள் அனைத்திற்கும் தீர்வு எட்டப்படும்.
கேள்வி:- இந்த விஜயம் அரசாங்கத்தை எந்த வகையிலேனும் அழுத்தத்துக்கு உள்ளாக்கும் வகை யில் அமையுமா?
பதில்:- அவ்வாறு அமையாது, கடந்த ஆட்சியைப் போல் சர்வதேசம் எம்முடன் முரண்பட்டு செயற்பட வில்லை. மாறாக இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை சர்வதேசம் சரியான வகையில் இனங்கண்டு செயற்படுகின்றது.