ரெஜினோல்ட் குரே நியமனத்தை வரவேற்கிறது கூட்டமைப்பு – விக்கி மௌனம்
வடக்கு மாகாண ஆளுனராக ரெஜினோல்ட் குரே, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வரவேற்புத் தெரிவித்துள்ளார்.
ரெஜினோல்ட் குரே ஒரு முற்போக்கான மனிதர். ஆளுனர் பதவிக்கான மிகச் சிறந்த தெரிவு. தாராளவாத கண்ணோட்டத்தைக் கொண்டவர் என்றுகுறிப்பிட்டுள்ள இரா.சம்பந்தன், இந்த நியமனத்தை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கூட இந்த தெரிவுக்கு இணங்குவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும், இந்த நியமனத்தை வரவேற்றுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர், “மாகாணசபைகளின் அதிகாரங்களுக்காக ரெஜினோல்ட் குரே எப்போதும் குரல் எழுப்பி வந்தவர்.
13ஆவது திருத்தச்சட்டத்தில், மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி, காவல்துறை அதிகாரங்களைப் பறித்துக் கொள்ளும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் முயற்சிகளுக்கு எதிராக அவர் பேசி வந்தார்.மாகாணசபைகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று இவர் வெளிப்படையான பரப்புரைகளை மேற்கொண்டு வந்தவர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவும், ஆளுனர் பதவிக்கு குரே மிகச் சிறந்த தெரிவு என்று தெரிவித்துள்ளார்.இதனிடையே, வட மாகாணத்தின் புதிய ஆளுனர் நியமனம் தொடர்பாக, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இருந்து எந்தக் கருத்தும் வெளியாகவில்லை.
அதேவேளை,ஜனநாயகத்தில், எல்லா முடிவுகளும் பெரும்பான்மையினராலேயே எடுக்கப்படுகிறது என்றும், பெரும்பான்மையினரின் முடிவு எப்போதும், சரியாக இருப்பதில்லை என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றில் ரெஜினோல்ட் குரே தெரிவித்திருக்கிறார்.
வடக்கு மாகாண ஆளுனராகப் பதவியேற்றுள்ள ரெஜினோல்ட் குரே, இடதுசாரி, தாராளவாதக் கொள்கையைக் கொண்டவர் என்பதுடன், 2000 ஆம் ஆண்டு தொடக்கம், 2009ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் மேல் மாகாண முதலமைச்சராகவும் பதவி வகித்திருந்தார் என்பதும் குறிப்பி்டத்தக்கது.