Breaking News

நிறைவேற்று அதிகாரத்தினால் மைத்திரி துள்ளுகிறாராம்! கூறுகிறார் மஹிந்த

ஜனாதபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரத்தினை உணரத் தொடங்கியுள்ளதாகவும், அதன் உஷ்ணம் அவரிடமிருந்து வெளிவரத் தொடங்கியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிடுகின்றார்.

பாரிய நிதி மோசடி, ஊழல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் பிரசன்னமாகி வாக்குமூலம் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு தொட்ந்து குறிப்பிடுகையில்,

‘மக்கள் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நான் அதனைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். நாட்டு மக்களுக்கு புதிய கட்சி குறித்த உணர்வு ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் இதுவரையில் புதிய கட்சியொன்று ஆரம்பிக்கப்படவில்லை. ஆரம்பிப்போம் என்று கூறிக்கொண்டு இருக்கின்றார்கள்.

நான் சுதந்திரக்கட்சியை பிளவுபடுத்தி கட்சியை விட்டு செல்லவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே கட்சியைப் பிளவுபடுத்தி கட்சியை விட்டு வெளியேறினார்.

கட்சியை உடைத்தது நானில்லை. மைத்திரிபால சிறிசேனவே. கட்சியை விட்டு வெளியேறி சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தினை கவிழ்த்தது யார்? நானா?, இல்லை பாராளுமன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சியை தோல்வியடையச் செய்தது யார் நானா? எல்லாவற்றையும் அவர்கள் செய்து விட்டு பழியை என் தோள்களில் சுமத்துகின்றனர்.

இதுதான் நிறைவேற்று அதிகாரம். நிறைவேற்று அதிகாரத்தின் உஷ்ணம் தற்போது வெளிவந்துள்ளது. இந்த நாட்டில் ஊடகங்கள் அடக்கப்படுகின்றன. நேற்று ஊடகங்களுக்கு ஏசிய விதம் குறித்து நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்.

ஊடகச் சுதந்திரம் பறிக்கப்படும் போது நீங்கள் அமைதி காப்பது ஏன்?’ என்றும் கேள்வி எழுப்பினார்.