Breaking News

சபாநாயகருக்கு அச்சுறுத்தல் விடுத்தவர் பற்றி பகிரங்கப்படுத்தவும்

கூட்டு எதிரணியிரை நாடாளுமன்றில் அங்கீகரிக்குமாறு தமக்கு தொலைபேசி வழியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ள நிலையில், அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நபர் குறித்து பகிரங்கப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில், அவர் சபாநாயகரிடம் இக் கோரிக்கையை விடுத்துள்ளார். இதுபற்றி சபையில் வாசு தொடர்ந்தும் தெரிவிக்கையில்-

‘ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினராகிய எம்மை நாடாளுமன்றில் அங்கீகரிக்குமாறு, சபாநாயகராகிய உங்களிடம் கோரிக்கை விடுத்த போது உங்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவித்தீர்கள். அவ்வாறு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்தி, தொடர்புபட்டவர்கள் பற்றி அறிவிக்குமாறு நாம் கேட்டிருந்தோம்.

ஆனால் தற்போது வரையில் அது தொடர்பிலான எந்தவிதமான தகவல்களும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. தங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தலானது முழு நாடாளுமன்றத்திற்கும் விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தலாகவே நாம் பார்க்கின்றோம். அவ்வாறு இருக்கும்போது, அது தொடர்பான விசாரணைகளை ஏன் இடைநிறுத்தினீர்கள்?

அச்சுறுத்தல் விடுத்தவரை நீங்கள் மன்னித்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவத்துடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் அவரது நண்பர் தொடர்புபட்டுள்ளமையாலா விசாரணைகளை இடைநிறுத்தியுள்ளீர்கள்?’ என கேள்வியெழுப்பினார்.

எனினும், அவ்வாறு விசாரணைகள் இடைநிறுத்தப்படவில்லையென்றும் தாம் மன்னிப்பு அளித்ததாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய இதற்கு பதிலளித்தார்.