“மாகாண ஆளுநருக்குரிய நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்படவேண்டும்”
புதிய அரசியலமைப்பின் பிரகாரம் ஆளுநருக்குரிய நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்படவேண்டும். அதற்கு வடமாகாண புதிய ஆளுநர் முன்னின்று செயற்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடமாகாணத்தின் புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு யாழ். ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய ஆளுநர் முற்போக்கு வாதியும் அனுபவம் மிக்கவருமாவார். அத்துடன் அவர் சிறந்த மனிதருமாவார். இவர் 2010 முதல் 2015வரை பாராளுமன்றில் அமைச்சராக கடமையாற்றியிருந்தவர். அதாவது ஆளும் கட்சியில் மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் எமக்காகச் செயற்பட்ட முன்னணி நண்பர். மிகவும் கஷ்டமான காலகட்டத்தில் நாங்கள் கேட்கும் எந்த விடயம் என்றாலும் அது தொடர்பில் பேசக்கூடிய நபராகவும் அதற்கு தீர்வு பெற்றுத் தருபவராகவும் இருந்துள்ளதுடன் எங்களுக்காக ஆளும் கட்சிக் கூட்டத்தில் பரிந்துரை செய்யும் நபராகவும் இருந்துள்ளார்.
விசேடமாக 2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் அன்றைய ஆளும் கட்சி 13ஆம் திருத்தச் சட்டத்தை திருத்துவதற்கு முயற்சி எடுத்திருந்தது.
அதில் இருக்கும் அதிகாரங்கள் சிலவற்றை இன்னுமொரு அரசியலமைப்பு மூலம் பறித்தெடுப்பதற்காக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதற்காக ஆளும் தரப்பிலே எதிர்ப்புத் தெரிவித்தவர் இன்றைய புதிய ஆளுநராவர்.
குறிப்பாக இந்த வருடம் எங்களுடைய நாட்டிற்காக புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படவுள்ளது. அந்த வேளையில் அதிகார பகிர்வு முறை அர்த்தமுள்ள வகையில் செய்யப்படவேண்டும்.
புதிய ஆட்சியாளர்கள் எங்கள் அனைவருடைய விருப்பத் தெரிவுகளை அரசியலமைப்பில் செயற்படுத்தவேண்டும். அந்த விருப்பத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்போது மாகாண ஆளுநர்களுக்குரிய அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும். அப்படியான கோரிக்கையை முன்னின்று புதிய ஆளுநர் செயற்படுத்துபவராக இருக்கவேண்டும்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் கைகளிலேயே அதிகாரங்கள் இருக்கவேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
அவ்வாறு நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட்ட ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஆளுநர் இருக்கும்போது அவரின் கையிலும் அதிகாரம் இல்லாது போகும். ஆகையினால் இன்று இருக்கும் புதிய சூழ்நிலையில் தன்னுடைய நிறைவேற்று அதிகாரத்தையே துறப்பதற்குத் தயாராக முன்னின்று ஜனாதிபதி செயற்படுகின்றபோது அவருடைய முகவராக புதிய ஆளுநர் அவருடைய கையில் உள்ள நிறைவேற்று அதிகாரத்தையும் சட்டவாக்குகளில் உள்ள ஆளுநர் அதிகாரங்களையும் துறக்கவேண்டும். அத்தகைய அதிகாரங்களை மாகாண சபையில் மக்கள் பிரதிநிதிகள் கையில் கொடுக்கவேண்டும் என்றார்.