சுதந்திர தின நிகழ்வுகளை பகிஸ்கரித்த ஹெல உறுமய
தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை ஜாதிக ஹெல உறுமய கட்சி பகிஸ்கரிப்பு செய்ததாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்ட காரணத்தினால் தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் ஜாதிக ஹெல உறுமய பங்கேற்கவில்லை என கட்சியின் பேச்சாளர் நிசாந்த சிறி வர்னசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய கீதம் தமிழில் பாடப்படுவது இனங்களுக்கு இடையில் பிணைப்பை ஏற்படுத்துவதற்கு பதிலாக இணங்களுக்கு இடையில் விரிசல் நிலைமையையே ஏற்படுத்தும்.ஒவ்வொரு நபர்களை திருப்திபடுத்த தேசிய கீதம் தமிழில் பாடுவதனை அனுமதிக்க முடியாது.
அரசாங்கத்திற்கு செய்ய எவ்வளவோ காரியம் இருக்கின்ற போதிலும் செய்யக் கூடாததுகளை செய்து வருகின்றது.அரசியல் அமைப்பிற்கு முரணானகவும் தேசியம் பற்றிய உணர்வின்றியும் எடுக்கப்பட்ட தீர்மானமாகவே தேசிய கீதம் தமிழ் மொழியில் பாட எடுக்கப்பட்ட தீர்மானம் கருதப்படுகின்றது.
இவ்வாறான ஓர் நிலையில் அரசாங்கத்தின் புதிய அரசியல் அமைப்பில் எவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்ற நியாயமான சந்தேகம் எழுந்துள்ளது.அரசாங்கத்தின் தூர நோக்கற்ற தீர்மானங்களினால் தேசிய ஒற்றுமைக்கு பதில் ஒற்றுமையின்மையே ஏற்படும்.
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதற்கு எதிர்ப்பு வெளியிட்டே, ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க சுதந்திர தின நிகழ்வுகளில் நேற்று பங்கேற்றிருக்கவில்லை.
ஜாதிக ஹெல உறுமய தேசிய கீதம் தமிழ் மொழியல் பாடுவதனை ஆரம்பம் முதல் எதிர்த்து வருகின்றது என நிசாந்த சிறி வர்னசிங்க தெரிவித்துள்ளார்.