ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் அத்துமீறல் – பீரிஸ்
இலங்கையின் உள்ளக விவகாரங்களில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அத்துமீறியுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
”இலங்கை வந்திருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், இலங்கையின் உள்ளக விவகாரங்களில் அத்துமீறி செயற்பட்டுள்ளதுடன் இராணுவத்துக்கு எதிராக அனைத்துலக குற்றவியல் விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார்.
எமது இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான சாட்சிகளை வெளிப்படுத்த மறுக்கும் ஐ.நா மனித உரிமை பேரவை, வெறுமனே அநீதியான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இலங்கைக்க எதிராக செயற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
எமது நாட்டின் இராணுவத்தின் நிர்வாகத்தில் தலையீடுகளை செய்வதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை.இலங்கை என்பது ஒரு ஜனநாயக நாடு . அதன் இறையாண்மைக்கும் ஐக்கியத்திற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதை அனுமதிக்க முடியாது. மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் இவ்வாறான நிலை ஏற்பட வில்லை.
வடக்கு மக்கள் எமக்கு ஒருபோதும் வாக்களிக்கமாட்டார்கள் என்று தெரிந்திருந்தும், அங்கு பாரிய அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்தோம். ஒரு போதும் அரசியல் உள்நோக்கத்துடன் நாம் செயற்பட்டிருக்கவில்லை போரின் பின்னர் பொறுப்புக் கூறும் விடயத்தில் முழு ஈடுபாட்டுடன் இலங்கை அரசாஙங்கம் செயற்பட்டது. அதன் வெளிப்பாடே நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளும் அதன் அறிக்கையுமாகும்.
எனவே இலங்கை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அனைத்துலக விசாரணை முன்னெடுப்பதற்கான தேவைகள் எதுவும் தற்போதில்லை.இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும், பொது மக்களை தெளிவுபடுத்தி நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.