Breaking News

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு – ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் கருத்துக்கு விளக்கம்

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்படுவதை விரும்பவில்லை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் கருத்து வெளியிட்டதாக வெளியான செய்தி தொடர்பாக, ஐ.நா பேச்சாளர் ருபேர்ட் கொல்வில் விளக்கமளித்துள்ளார்.

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்படுவதை விட, அவர்களின் வழக்குகளை துரிதமாக விசாரித்து முடிப்பதே சிறந்தது என்று வடக்கு மாகாண முதலமைச்சருடனான சந்திப்பின் போது, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்திருந்தார்.

அதனை, அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்படுவதை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விரும்பவில்லை என்றும், அந்தக் கோரிக்கை நிராகரித்து விட்டதாகவும் ஊடகங்கள் செய்தியை வெளியிட்டிருந்தன.

இதுகுறித்து, ஐ.நா மனித உரிமை ஆணையாளருடன், கொழும்பு வந்துள்ள அவரது பேச்சாளர் ருபேர்ட் கொல்வில் விளக்கமளித்துள்ளார்.

“இது ஊடகங்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

அரசியல் கைதிகள் குற்றங்களில் ஈடுபட்டதற்கு போதுமான சான்றுகள் இருந்து, தண்டனை வழங்கப்படும் போது, ஏற்கனவே அவர் தடுப்புக்காவலில் இருந்த காலப்பகுதியைக் கருத்தில் கொண்டு அவர்களின் விடுதலையைத் துரிதப்படுத்த வேண்டும்.

அதேவேளை, வழக்கு இல்லையென்றால், குற்றம்சாட்டும் அளவுக்கு- ஒப்புதல் வாக்குமூலம் தவிர்ந்த -போதுமான ஆதாரங்கள் இல்லையென்றால், அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்” என்றே ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருந்தார் என்றும் ருபேர்ட் கொல்வில் குறிப்பிட்டுள்ளார்.