Breaking News

ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்த இலங்கையர்களை நாடு திரும்ப ஜனாதிபதி அழைப்பு

போரின் போது, இலங்கையில் இருந்து ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்து சென்ற இலங்கையர்கள் அனைவரையும், மீண்டும் நாடு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

ஜேர்மனிக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், நேற்று பெர்லினில், ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மார்க்கெலை சந்தித்த பின்னர், அவருடன் இணைந்து கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இதன்போது செய்தியாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழக்கூடிய நாடாக இலங்கை மாறிவிட்டது. இத்தகைய நிலையில், போரின் போது, இலங்கையை விட்டு வெளியேறி, ஜேர்மனியில் அகதிகளாக தங்கியுள்ள இலங்கையர்கள் அனைவரும் தாய்நாட்டுக்குத் திரும்ப வேண்டும்.” என்று பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஜேர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மார்க்கெல், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நிகழ்ந்துள்ள ஜனநாயக மாற்றங்களையிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார்.

நாட்டின் அமைதியைக் கட்டியெழுப்ப மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்தும் அவர் திருப்தி வெளியிட்டார்.இலங்கைக்கு எதிர்காலத்தில் சாத்தியமான உதவிகள் அனைத்தும் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.