யாழ்ப்பாணத்தில் மங்களவின் நிகழ்வுகளைப் புறக்கணித்த விக்கி
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், மைத்திரிபால சி்றிசேன- ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் இடையில் கொள்கை மற்றும் அரசியல் ரீதியான விரிசல்கள் அதிகரித்து வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு முதலமைச்சர் சி.வி.வி்க்னேஸ்வரன், கொழும்புடன் அரைமனதுடன் -மேலோட்டமான நல்லுறவை பேணும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேசிய நல்லிணக்கப் பொறிமுறைக்கான ஆலோசனை செயலணியின் ஆரம்ப நிகழ்வு நேற்று முன்தினம், யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றி்ருந்த போதிலும், அதில் வடக்கு மாகாண முதலமைச்சர் பங்கேற்கவில்லை.
இந்த நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தனர்.
அதற்கு முதல் நாளான, கடந்த வியாழக்கிழமை, மங்கள சமரவீரவினால் யாழ்ப்பாணத்தில் அளிக்கப்பட்ட இராப்போசன விருந்திலும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை.
அதேவேளை, வடக்கு மாகாண ஆளுனர் எச்எம்.ஜி.எஸ் பாலிஹக்கார அளித்த பிரியாவிடை தேனீர் விருந்தில் பங்கேற்ற முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஐந்து நிமிடங்களிலேயே அங்கிருந்து வெளியேறியிருந்தார் என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.