வடக்கும் கிழக்கும் இணைந்த சமஷ்டியுடன் அதிகாரப்பகிர்வே தமிழருக்கு நிம்மதி தரும்!
வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பதுடன் சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வே தமிழ் மக்களுக்கு நிம்மதியை தரும் என தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களுள் ஒருவரான த.வசந்தராஜா தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைவு பற்றி சமயத் தலைவர்களின் ஆசிச் செய்தியுடன் பொதுமக்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வு மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் வைபவத்தில் தலைமை வகித்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்த 66 வருடகாலத்தில் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் இன்றுவரை வென்றெடுக்கப்படவில்லை. பல்வேறு அரசியல் தலைமைகள் எமது மக்களுக்காக குரல் கொடுத்திருந்த போதும் எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இருப்பினும் 30 வருட கால யுத்த வரலாற்றின் பின் தற்போது ஐக்கிய நாடுகள் சபை எமது மக்களின் பிரச்சினைகனை இனங்கண்டு அந்நாடுகள் திரும்பிப் பார்க்கின்ற ஒரு காலகட்டம் இதுவாக இருக்கின்றது. இக்கால கட்டத்தில் நாம் விழிப்பாக இருக்கத்தவறினால் வரலாற்றுத் துரோகம் இளைத்தவர்களாவோம். வட, கிழக்கு இணைந் திருப்பதுடன் சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வே எமது மக்களுக்கு நிம்மதியை தரும்.
தமிழ் மக்கள் பேரவையானது ஒருபோதும் அரசியல் கட்சியாக செயற்படாவிட்டாலும் அது மக்களின் தேவைக்காக அரசியல் நடவடிக்கைகளை செய்யும். ஐக்கிய நாடுகள் எமது மக்களின் பிரச்சினைகளை ஆராய்கின்ற அதேசமயம் இலங்கையிலுள்ள அரசியல் யாப்பின் பல்வேறு சரத்துக்களில் திருத்தங்களையும் உள்ளீர்ப்புக்களை செய் வதற்கு முயற்சிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இவ்விடயங்களுக்கு முகங்கொடுத்து மிகவும் ஆழமாக சிந்தித்து புத்திசாதுரியமாக நடந்துகொள்ள வேண்டிய தார்மீகப் பொறுப்பு எமக்குள்ளது. இதன் நடவடிக்கைக்கு முன்னேற்பாடாகவே புத்தி ஜீவிகள் அடங்கிய தமிழ் மக்கள் பேரவையை நாம் ஸ்தாபிக்க வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டது.
வட, கிழக்கில் 99,000 விதவைகள் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வாழ்வாதாரத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.இளைஞர், யுவதிகள் மத்தி யில் பெருமளவான கலாசார சீர்கேடுகள் விதைக்கப்பட்டுள்ளன. இலட்சக்கணக்கான எமது மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. இவர்களின் பொருளாதாரம் சுக்குநூறாக தகர்த்தெறியப்பட் டுள்ளன. போர்க் குற்றம் நிகழ்ந்தள்ளது. இவற்றிற்கெல்லாம் மக்கள் ஆணையி னைப் பெற்று தீர்வுகாண்பதில் எமது பேரவை மிக உறுதியாக உள்ளது. போர்க்குற்ற உள்ளக விசாரணைகளில் நாம் நம்பிக்கை இழந்துள்ளோம். எனவே சர்வ தேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றம் இழைத்தோர் தண்டிக்கப்பட்டு எமது மக்களுக்கு பாரியளவிலான நஷ்டஈடும் வழங்கப்பட வேண் டும் எனவும் அவர் தெரிவித்தார்.