பலாலி விமான நிலையத்தை விரிவாக்க இந்தியா உதவி
பலாலி விமானப்படைத் தளத்தை சிவில் விமான நிலையமாக விரிவாக்குவதற்கும், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கும் உதவிவழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் நடந்த இந்திய- இலங்கை கூட்டு ஆணைக்குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலர் ரேணு பால் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
“பலாலி விமானப்படைத் தளத்தை, சிவில் விமான நிலையமாக தரமுயர்த்துவது தொடர்பாக, ஆராய்வதற்கு இந்திய விமானப்படை அதிகாரிகள் குழுவொன்ற விரைவில் யாழ்ப்பாணம் செல்லவுள்ளது.
அத்துடன், தென்னிந்தியாவுடனான கடல்வழித் தொடர்புகளை முன்னேற்றும் வகையில், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஏற்கனவே நான்கு கட்டங்களாக காங்கேசன்துறை துறைமுகம் இந்தியாவினால் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. ஐந்து மற்றும் ஆறாவது கட்ட தரமுயர்த்தல் பணிகளை இந்தியா முன்னெடுக்கவுள்ளது.
அதேவேளை, தீவிரவாத முறியடிப்பு விடயத்தில் இந்திய- இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவாக்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.