ஆதங்கங்களுக்கு இன்று பதிலளிப்பேன்!- ஐ.நா மனித உரிமை ஆணையாளர்
எல்லாக் கேள்விகளுக்கும் இன்று தான் பதிலளிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்ப முயன்ற போது, கருத்து வெளியிட்ட அவர், “என்னிடம் கேட்பதற்காக உங்களிடம் பல்வேறு கேள்விகளும் ஆதங்கங்களும் இருக்கின்றன என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.
ஊடகங்கள் மிகவும் ஆர்வமான முறையில் நான் கூறும் விடயங்களை செவிமடுக்க காத்திருக்கின்றன என்பதையும் நான் புரிந்து கொள்கின்றேன்.ஆனால் எனது சந்திப்புக்களை முடித்து விட்டு செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர் மாநாடொன்றை நான் நடத்தவுள்ளேன். அந்த செய்தியாளர் மாநாட்டில் உங்களின் அனைத்து ஆதங்கங்களுக்கும் நான் பதிலளிப்பேன்.
எனவே அதுவரை உங்களை பொறுத்திருக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன். இப்போது உங்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது மிகவும் சிரமமாகும்.ஆனால் நாளை (இன்று) கட்டாயம் நான் உங்கள் கேள்விகளுக்கும் ஆதங்கங்களுக்கும் பதிலளிப்பேன்” என்று குறிப்பிட்டார்.