ஐ.நா.வில் என்ன கூறப்போகிறார் என்பதே சிக்கல்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை விஜயத்தில் அவரின் நகர்வுகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை விடவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை யில் இலங்கை தொடர்பில் எவ்வா றான அறிக்கையை வெளியிடப் போகின்றார்
என்பதிலேயே சிக்கல் உள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.இலங்கையின் உள்ளக விசாரணை பொறிமுறைகளில் சர்வதேச தலையீடுகளுக்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தி உண்மைகளை கண்டறியவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் முயற்சிக்க வேண்டும். காலத்தை கடத்தி கொடுத்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தாது செயற்படுவது தொடர்ந்தும் சிக்கல்களை ஏற்படுத்தும் வகையில் அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் பலதரப்பட்ட நபர்களை சந்தித்தும் பொதுமக்களை சந்தித்தும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்நிலையில் அவரது வருகை இலங்கையில் எவ்வாறான தாக்கத்தை உருவாக்கும் என ஊடகம் ஒன்று எழுப்பி கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கைக்கு வருகை தந்திருப்பது எதற்காக என்பது தொடர்பில் எம்மால் கருத்து தெரிவிக்க முடியாது. எனினும் அவர் வருவதை தடுக்கவோ அல்லது இந்த விடயம் தொடர்பில் விமர்சனம் முன்வைக்கவோ முடியாது. இலங்கை ஐக்கிய நாடுகள் சபையுடன் ஒன்றிணைந்து செயற்படும் நாடு என்பதால் அவர்களின் செயற்பாடுகளை நாம் ஏற்று அதற்கேற்ப சில ஒத்துழைப்புகளுடன் செயற்படவேண்டிய அவசியம் உள்ளது.
மேலும் அவரின் விஜயம் சாதகமாக அமைந்துள்ளது என்பதை ஊடகங்களின் கருத்துகள் மூலமாக அறிந்துகொள்ள முடிகின்றது. அதேபோல் அவர் வடக்கில் பொதுமக்களை சந்தித்துள்ளமை, தமிழ் தலைமைகளை சந்தித்துள்ளமை மற்றும் அரச பிரதிநிதிகளை சந்தித்துள்ளமை என்பன நல்ல விடயமாகும். இலங்கையில் அவர் மேற்கொள்ளும் நகர்வுகள் அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என கூறுகின்றனர்.
ஆனால் இலங்கையில் அவரின் நகர்வுகள் எவ்வாறு என்பது முக்கியமானதல்ல. இலங்கையில் இருந்து செல்லும் அவர் ஐக்கிய நாடுகள் மனித்து உரிமைகள் பேரவையில் எவ்வாறான வகையில் செயற்படப் போகின்றார். அவர் என்ன விதமான அறிக்கையை இலங்கை தொடர்பில் வெளியிடப் போகின்றார் என்பதிலேயே சிக்கல் உள்ளது. அதேபோல் உள்ளக செயற்பாடுகளில் அவர்களின் தலையீடு எவ்வாறு அமைந்துள்ளது என்பதிலும் சிக்கல் உள்ளது. இலங்கையின் உள்ளக பொறிமுறைகளை சரவதேசம் கையாள்வதை நாம் விரும்பவில்லை .
மேலும் இன்றும் வடக்கு கிழக்கு மக்களை அவர் சந்தித்த போது மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவரால் அறிந்துகொள்ள முடிந்துள்ளது. காணாமல் போனோர், கடத்தப்பட்டோர் மற்றும் அபகரித்த காணிகள் என்பவற்றை விடுவிக்கக்கோரியே மக்கள் புலம்பி வருகின்றனர். இந்த நிலைமை இன்று நேற்று அல்ல யுத்தம் முடிவுக்கு வந்ததில் இருந்தே இருக்கின்றனது.
எனவே இன்றும் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் சர்வதேச தலையீடு உள்ளது என்றால், ஆட்சி மாற்றத்தின் பின்னரும் இலங்கை தொடர்பில் சர்வதேசம் சந்தேகக் கண்ணோடு அவதானிக்கின்றது என்றால் அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் கண்மூடித்தனமான செயற்பாடுகள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீதான அக்கறையற்ற போக்குமே இன்றும் தமிழ் மக்கள் தமது புலம்பல்களை சர்வதேச மட்டத்தில் தெரிவிக்க வேண்டிய நிலையை உருவாக்கியது.
எனவே பிரச்சினைகளில் இருந்து விடுபட வேண்டுமாயின் முதலில் பிரச்சினைக்கான காரணத்தை கண்டறிய வேண்டும். சர்வதேச அழுத்தங்களும் சர்வதேச விசாரணைப் பொறிமுறையும் இலங்கையில் காணப்படுவதெனின் அதற்கான காரணம் என்னவென்பதை அரசாங்கம் அறிந்துகொள்ள வேண்டும். யுத்தத்தின் பின்னர் இலங்கையில் பாதிக்கப்பட்ட சமூகத்தை கவனத்தில் கொள்ளாது அப்படியே கைகழுவிவிட்டமையே இன்று வரையில் நாம் பிரச்சினைகளை சந்திக்க காரணியாக அமைந்துள்ளது.
எனவே இப்போதாவது அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தி உண்மைகளை கண்டறியவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் முயற்சிக்க வேண்டும். காலத்தை கடத்தி கொடுத்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தாது செயற்படுவது தொடந்தும் சிக்கல்களை ஏற்படுத்தும் வகையில் அமையும். எனவே அரசாங்கம் அதை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.
அதேபோல் இப்போதும் சர்வதேசம் தமது தேவைகளை பூர்த்திசெய்யும் வகையிலேயே தமது நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது. யுத்த குற்றச்சாட்டுகள், காணாமல் போனோர் தொடர்பிலும் சர்வதேச விசாரணைகள் தொடர்பிலும் மாத்திரம் கதைப்பவர்கள் வடக்கு கிழக்கு மக்களின் யதார்த்த பூர்வமான பிரச்சினைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விவகாரங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதை தவறென கூற முடியாது. எனினும் அதையும் தாண்டி அவர்களின் வாழ்வாதாரம், அடிப்படை சிக்கல்களை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்றார்.