வடக்கு முதல்வரின் கருத்துக்கு வரதராஜபெருமாள் பதில்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட எந்தக் காலக்கட்டத்தலும் இந்தியா தமிழ் மக்கள் சார்பில் இலங்கையிடம் சமஷ்டி தீர்வை கோரவில்லையென வட-கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார்.
சமஷ்டித் தீர்வை பெற்றுக்கொடுக்க இந்தியா ஒத்துழைக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்து வரும் நிலையில், எமது ஆதவனின் ‘நேருக்கு நேர்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வரதராஜப் பெருமாள் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கையில் சமஷ்டி தீர்வை இந்தியா கோராது என்றும் எனினும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை இலங்கை அரசாங்கத்திடம் முன்வைக்கும் என்றும், தாம் ராஜீவ் காந்தியை சந்தித்தபோது தம்மிடம் தெரிவித்ததாக வரதராஜப் பெருமாள் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு இலங்கையிடம் ராஜீவ் காந்தி வலியுறுத்தவில்லையென்றும் வரதராஜப் பெருமாள் குறிப்பிட்டுள்ளார்.
குறைபாடுகள் அற்ற வகையில் இலங்கையில் சமஷ்டித் தீர்வை முன்வைப்பதற்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டுமென்றும், அது இந்தியால் மட்டுமே முடியுமென்றும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் யாழில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.