அரசியலமைப்பு மாற்றம் குறித்து ஆராயும் வடமாகாண குழு கூடுகிறது
இலங்கை அரசியலமைப்பு மறுசீரமைப்பிற்கான முன்மொழிவுகளை வழங்குவதற்கான வடமாகாணசபையின் 19 பேர் கொண்ட குழுவின் 2ஆம் அமர்வு 26ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக மேற்படி குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரும், மாகாணசபை அவைத் தலைவருமான சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த மாதம் 26ஆம் திகதி மாகாணசபையின் 44ஆவது அமர்வில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் அரசியலமைப்பு மறுசீரமைப்பில் தமிழ் மக்கள் நலன்சார்ந்த வடமாகாணசபையின் முன்மொழிவுகளை வழங்குவதற்கான 19 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. இதனையடுத்து மேற்படி குழு கடந்த 1ஆம் திகதி தமது 1ஆவது அமர்வை முதலமைச்சர் அலுவலகத்தில் நடத்தியிருந்தது. இதன்போது வடகிழக்கு மாகாணங்களை தாயகமாக கொண்ட தமிழ் மக்களுடைய நீண்டகால வரலாற்றை அடிப்படையாக கொண்டு தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வு தேவை என்பதை வடமாகாணசபை வலியுறுத்தும் என தீர்மானிக்கப்பட்டிருந்ததுடன், வடகிழக்கு தமிழ் மக்களுடைய நீண்டகால வரலாற்றை ஆவணப்படுத்தி எடுப்பதற்கான பொறுப்பை வடமாகாண கல்வியமைச்சருக்கு கொடுத்திருந்தது.
இந்நிலையில் எமது 19 பேர் கொண்ட குழு 2ஆம் அமர்வை நாளை 26ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இதில் வடகிழக்கு மாகாணங்களை தாயகமாக கொண்ட தமிழ் மக்களுடைய வரலாற்றை ஆவணப்படுத்தும் பொறுப்பை எடுத்திருந்த கல்வி அமைச்சர் அதனை இந்த அமர்வில் சமர்ப்பிப்பார் என நம்புகிறோம். மேலும் எமது பணிகள் துரிதமாக முன்னெடுக்க நாம் தீர்மானித்துள்ளதுடன், எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி வரையில் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு தங்கள் முன்மொழிவுகளை வழங்குவதற்கு கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளமையினால் வடமாகாணசபையின் முன்மொழி வுகளை மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவு செய்து மாகாணசபையில் எடுத்து விவாதித்ததன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாக முன்வைக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.