Breaking News

இனப் பிரச்சினை தீர்வு புதிய யாப்பில் இல்லை! சம்பந்தன் நிலைப்பாடு என்ன?

புதிய அரசியல் யாப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த யோசனைகளை அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையில் இனப் பிரச்சினைக்கான தீர்வு எவ்வாறு முன்வைக்கப்படும் என்ற கேள்விகளை அரசியல் விமர்சகர்கள் எழுப்பியுள்ளனர்.

இனப் பிரச்சினை தீர்வு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஆகிய இரண்டு விடயங்களும் புதிய அரசியல் அமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார்.

ஆனால் அந்த யோசனைகளை தற்காலிகமாக பிற்போட்டு புதிய யாப்புக்கான யோசனையை முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முன்வைத்த யோசனைகளை நிராகரித்தன் மூலம் ஒற்றை ஆட்சி முறையை அவர்கள் தொடர்ந்து விரும்புகின்றனர் என்பது தெளிவாகின்றது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

30 ஆண்டுகால அஹிம்சைப் போராட்டம், 30 ஆண்டுகால அரசியல் போராட்டம் என 60 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் தென்பகுதி சிங்கள அரசியல் கட்சிகள் செயற்படுகின்றன என்பதை நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல நிகழ்த்திய உரையின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதற்கு உரிய பதில் வழங்காமல் நல்லாட்சி அரசாங்கத்தின் மூடி மறைப்புகளுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் விமர்சகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இனப் பிரச்சினைக்கான தீர்வினை இந்த ஆண்டு இறுதிக்குள் பெற்றுத் தருவதாக தெரிவித்து மக்களின் வாக்குகளை வடக்கு கிழக்கில் பெற்று வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் நோக்கங்களை நிறைவேற்ற உரிய முறையில் செயற்படுகின்றதா என்ற சந்தேகத்தையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் இணைந்த வடக்கு கிழக்கிற்குள் தமிழ் பேசும் மக்கள் ஒன்றிணைந்து வாழ்வதற்கான சுயநிர்ணய உரிமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரசாரங்களில் கூறியிருந்தது.

இதனை நிறைவேற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் ஆணை வழங்கிய நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தின் பங்குதாரர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது.

அதேவேளை எதிர்கட்சி தலைவர் பதவி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிற்கு வழங்கப்பட்டுள்ளதுடன் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் பதவி செல்வம் அடைக்கலாநாதனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ள நல்லாட்சி அரசாங்கம், அரசியல் யாப்பு உருவாக்கத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு அவசியம் என்பதன் அடிப்படையில் நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றுவதற்கு திட்டமிட்டது.

இதன் அடிப்படையிலேயே புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்காக 225 மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றத்தினை அரசியலமைப்பு பேரவையாக மாற்றுவது குறித்த பிரேரணை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 

அப்பிரேரணை மீதான விவாதம் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவிருந்த போதும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் அது தொடர்பிலான திருத்தங்களை முன்வைக்க வேண்டுமெனக் கோரினார்கள்.

இதனையடுத்து நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றுவது தொடர்பில் அனைத்து கட்சிகளின் யோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட திருத்தங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த பரிந்துரைகள் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் நிராகரிக்கப்பட்டது.

ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யோசனைகளை பலம் பொருந்திய இரு அரசியல் கட்சிகள் நிராகரித்துள்ள நிலையில், எவ்வாறு புதிய அரசியல் யாப்பு தொடர்பாக ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் மக்களிடம் பெறப்படும் யோசனைகளை அரசாங்கம் உள்ளடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் மக்களின் வாக்கு பலத்தின் மூலம் ஆட்சியமைத்துள்ள நல்லாட்சி அரசாங்கமானது சர்வதேசத்தை ஏமாற்றும் வகையில் தமிழ் மக்களின் காணிகளை விடுவித்து வருகின்ற போதிலும் தமிழ் மக்களின் இறைமைசாந்த அரசியல் உரிமைகளை எந்த வகையிலும் வழங்காது என்பதே யதார்த்தமாகும்

அதனை உணர்ந்து கொண்டே தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தமது அரசியல் சுகபோக வாழ்க்கைக்காக தமிழ் மக்களை வெறும் பகடைக் காய்களாக பயன்படுத்தி வருகின்றார்கள். கூட்டமைப்பின் இவ்வாறான இரட்டை முகம் கொண்ட செயற்பாட்டை மக்கள் உணர்ந்து செயற்படும் பட்சத்திலேயே ஏமாற்று அரசியல் முடிவிற்கு கொண்டு வரலாம் என்பது கண்கூடாகும்.