வவுனியாவில் எட்டு கிராம மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)
வவுனியா வேலங்குளம் கிராம சேவையாளர் பிரிவுள்ள 8 கிராம மக்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா வேலங்குளம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள 8 கிராமங்களான வேலன்குளம்,மடுக்குளம்,சிவனகர்,கோயில்மோட்டை,சின்னத்தம்பனை,செங்கப்படை, குஞ்சுக்குளம், கோயில் புளியங்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள மக்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
357குடும்பங்களை உள்ளடக்கிய இக்கிராமங்களில் வீதி புனரமைப்பு மற்றும் வீட்டுத்திட்டம் என்பன வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பூவரசங்குளம் ஊடாக இரணை இலுப்பைக்குளம் செல்லும் சந்தியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் பல மணிநேரமாகியும் சம்பவ இடத்திற்கு அரச அதிகாரிகள் வருகை தராததால் கிராம மக்கள் நடைபவனியாக பூவரசங்குளம் சந்தி வரை சென்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1999 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து 2010 ஆம் ஆண்டு மீள்குடியேறிய வவுனியா வேலங்குளம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள 8 கிராமங்களில் சுமார் 357 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 257 மக்கள் வாழ்கின்றனர்.
கிராம மக்கள் பயணிக்கும் 10 கிலோமீட்டர் தூரமான பிரதான வீதியானது இது வரை திருத்தப்படாமல் உள்ளதாகவும் இதனால் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை சம்பவ இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மாகாணசபை உறுப்பினர் எம். தியாகராசா, எம்.பி நடராசா, வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சத்தியசீலன், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிர்வாக உத்தியோகத்தர் வசந்தன், ஸ்ரீலங்கா போக்குவரத்து சபையின் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து கூட கிராமத்திற்கு வருகை தருவதில்லை என மக்கள் விடுத்த கோரிக்கைக்கு ஸ்ரீலங்கா போக்குவரத்து சபையின் உத்தியோகத்தர்கள் பேரூந்து சேவையினை ஒரு வாரத்தில் நிவர்த்தி செய்வதாக வாக்குறுதி அளித்தனர்.