Breaking News

இரத்த உறவுகளை ஒருபோதும் மறக்கமாட்டோம் - சுஷ்மா

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில் இந்திய அரசு, இலங்கை அரசுக்கு நட்பு அழுத்தம் தர வேண்டும். இந்த அழுத்தம், தற்போது நமது தமிழ் முற்போக்கு கூட்டணியினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு தயாரித்து வரும் யோசனை வரைவுகள், புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படுவதற்கு உதவிட வேண்டும். 

கடந்த காலங்களை போலல்லாமல், இன்று வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களுக்கு, குறிப்பாக மலையக மக்களுக்கு உரிய தேசிய அவதானத்தை நமது கூட்டணி புதிய சுறுசுறுப்புடன் பெற்று தந்து கொண்டுள்ளது. 

இன்று புதிய அரசியலமைப்பு செயற்பாட்டில் நாம் உள்வாங்கப்பட்டுள்ளோம். இந்த நாட்டின் தேசிய நீரோட்டத்தில் எங்களை எவரும் புறக்கணிக்க முடியாத அரசியல் சூழலை நாம் படிப்படியாக குறுகிய காலத்தில் ஏற்படுத்தியுள்ளோம். நாம் மேலும் பலம்பெற இந்தியா உதவிட வேண்டும். 

வடக்கு, கிழக்கில் வாழும் எங்கள் தமிழ் உறவுகள் மீது, இந்திய அரசு காட்டிவரும் அக்கறை மற்றும் அவதானங்களுக்கு எந்தவித பழுதும் ஏற்படாத விதத்தில், எங்கள் மீதும் இந்தியாவின் அக்கறை அதேவிதமாக இருந்திட வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் தெரிவித்ததாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார். 

இதற்கு “நீங்கள் எங்களது இரத்த உறவுகள் என்பதை நாம் ஒருபோதும் மறக்க முடியாது” என வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதிலளித்ததாக கூறிய அமைச்சர் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டதாவது, 

அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன், எம்பிக்கள் திலகராஜ், அரவிந்தகுமார், கூட்டணி பொது செயலாளர் அன்டன் லோரன்ஸ் ஆகியோர் அடங்கிய நமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழு, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான தூதுக்குழுவை கொழும்பில் வைத்து சந்தித்தது. 

புதிய அரசியலமைப்பு உருவாக்கம், புதிய தேர்தல் முறைமை ஆகியவை தொடர்பில் நமது முற்போக்கு கூட்டணி தேசிய ரீதியாக இன்று எடுத்து வரும் நடவடிக்கைகளை நாம் இந்திய அமைச்சருக்கு விளக்கி கூறினோம். புதிய தேர்தல்முறை மாற்றங்கள் வேறு எந்த ஒரு பிரிவினரையும்விட, தென்னிலங்கையில் பரந்து வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களுக்கே பெரும் சவாலானது என்பதை தாம் தெளிவாக உணர்ந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் எமக்கு கூறினார். 

எமது நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்பிற்கான நமது அதிகார பகிர்வு மற்றும் கலாச்சார , சமூக தேவைகள் அடங்கிய யோசனை வரைவு நடவடிக்கைகள், இம்மாத இறுதியில் நிறைவு பெறும் என்பதை அவருக்கு நாம் தெரிவித்தோம். இந்நாட்டில் தமிழர் பிரச்சினை என்பது, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல என நாம் அவருக்கு எடுத்து கூறினோம். 

மலைநாட்டில் நடைமுறையாக தொடங்கியுள்ள இந்திய வீடமைப்பு திட்டம் தொடர்பில் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்து, இந்த திட்டத்தை இன்னமும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தோம். 4,000 வீடுகள் கொண்ட முதல் பாகம் நிறைவுக்கு வரும் போது, இரண்டாம் பாகமும் ஆரம்பிக்கும் என அவர் எங்களுக்கு உறுதியளித்தார். 

மலைநாட்டில் புதிய தேசிய பாடசாலைகள், கணணி-விஞ்ஞான கூடங்கள் ஆகியவற்றுக்கும் இந்திய உதவியை நாம் கோரினோம். அவற்றை மிக சாதகமாக இந்திய அரசு பரிசீலிக்கும் என அவர் பதில் அளித்தார். இந்நாட்டில் தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கு ஒரு முன்னோடியாக மொழிப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் நாம் எடுத்து கூறினோம். 

இது தொடர்பில் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை கடந்த காலத்தில் இலங்கை - இந்திய அரசுகளுக்கு இடையில் ஏற்படுத்த பட்டது என்பதையும், அதை தற்போது அரச கரும மொழிகள் அமைச்சு மீண்டும் முன்னெடுக்கும் பட்சத்தில், இந்திய அரசின் உதவிகள் தொடரும் எனவும் இந்திய தரப்பில் கூறப்பட்டது.