கொள்ளையடிக்க வருகிறார் சுஸ்மா! கூண்டிலேற்ற வருகிறார் ஹுசேன் – பீரிஸ் கண்டுபிடிப்பு
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட்அல் ஹுசேன் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோரின் இலங்கை பயணங்கள், நாட்டுக்கு எதிரான சிவப்பு சமிஞ்ஞையின் வெளிப்பாடு என்று தெரிவித்துள்ளார் இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ இந்திய வெளிவிவகார அமைச்சர் வெள்ளிக்கிழமை சிறிலங்கா வருகிறார்.
இலங்கையின் வளங்களை சட்டவிரோதமாக கொள்ளையடிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு சட்டரீதியான அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே சுஸ்மா சுவராஜ் கொழும்பு வருகிறார்.இவருடன் வர்த்தக உடன்பாடுகளிலும் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடவுள்ளது.
வடக்கில் இந்திய மீனவர்கள் எமது நாட்டின் கடல் வளத்தை மிகவும் மோசமான முறையில் சூறையாடுகின்றனர்.இவ்வாறானதொரு சூழ்நிலையில் இந்தியாவுடன் மேலும் வர்த்தக உடன்பாடுகளைக் கைச்சாத்திடுவது அவர்களது சட்ட ரீதியான கொள்ளைக்கு அங்கீகாரம் வழங்குவது போன்றதாகும்.
அவரது வருகைக்கு எமது அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில் சுஸ்மா சுவராஜை நேரடியாக சந்தித்து தெளிவுபடுத்த இந்திய தூதரகம் ஊடாக அனுமதி கோரியுள்ளோம்.அதேவேளை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இவ்வார இறுதியில் கொழும்பு வரவுள்ளார்.
இலங்கை தொடர்பான அவரது நிலைப்பாடு அடிப்படை ரீதியாக தவறானது. அவரது வருகைக்குப் பின்னர் சமர்ப்பிக்கப் போகும் அறிக்கை ஐ. நா. பொதுச் சபைக் கூட்டத்தில் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.உள்ளக விவகாரங்களில் தலையிடும் வகையிலேயே மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைனின் செயற்பாடுகள் காணப்படுகின்றன. இதனையே நாங்கள் எதிர்க்கின்றோம்.
அவரையும் சந்தித்து விளக்கமளிக்க கூட்டு எதிரணி முயற்சிகளை மேற்கொண்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.