அம்பாந்தோட்டை செல்கிறார் ரணில்
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், சீனாவின் முதலீட்டில் அம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை ஆய்வு செய்யும் பயணம் ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மேற்கொள்ளவுள்ளார்.
இந்த ஆய்வுப் பயணத்தின் போது, அவர் மத்தல அனைத்துலக விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம், சூரியவெவ அனைத்துலக துடுப்பாட்ட மைதானம், மற்றும், அனைத்துலக கருத்தரங்க மண்டப உள்ளிட்டவற்றுக்கு அவர் நேரில் செல்லவுள்ளார்.
அத்துடன், அம்பாந்தோட்டை மிருககாட்சி சாலை, தாவரவியல் பூங்கா, ரன்மிஹிதென்ன தொலைக்காட்சி நாடக கிராமம் என்பனவற்றையும் சிறிலங்கா பிரதமர் பார்வையிடவுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சியில் இருந்த போது, அம்பாந்தோட்டையில், சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை கடுமையாக விமர்சித்து வந்தார்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டன.
எனினும், தற்போது சீனாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்த முனையும் சிறிலங்காவின் புதிய அரசாங்கம், அவ்வாறு இடைநிறுத்தப்பட்ட திட்டங்களுக்கு அனுமதி அளித்து வருகிறது.
வரும், ஏப்ரல் மாதம் சீனாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா பிரதமர், அந்த நாட்டு தலைவர்களுடன் நடத்தப்படும் பேச்சுக்களில், சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை தொடர்ந்து செயற்படுத்துவது தொடர்பாக பேசவுள்ளார்.
இதற்காகவே அவர் அம்பாந்தோட்டைக்கான ஆய்வுப் பயணத்தை இன்று மேற்கொள்ளவுள்ளார்.