தமிழில் தேசியகீதம் பாடப்பட்டது தொடர்பில் சம்பந்தன் கருத்து
இலங்கையின் சுதந்திர நாள் நிகழ்வில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல என்று தெரிவித்துள்ளார், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “இது புதியதுமல்ல, அதேவேளை ஆச்சரியப்பட வேண்டிய ஒன்றும் அல்ல. ஏனென்றால், தேசிய கீதம் ஏற்கனவே சுதந்திர நாள் நிகழ்வில் தமிழில் பாடப்பட்டு வந்ததே. ஏற்கனவே இருந்த ஒன்று மீள நடைமுறைக்கு வந்துள்ளது. எனவே இது பெரிய விடயமல்ல.
மீண்டும் அதனைப் பாடத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிதான். எனினும் இதனை மீள் நடைமுறைப்படுத்தியதால் அரசாங்கத்திற்கும் நன்மையாகும். அதேபோன்று மக்களுக்கும் நல்லதுதான் எனினும் தமிழ் மக்கள் பிறரின் தயவில் வாழ வேணடியவர்களல்ல” என்றும் அவர் தெரிவித்தார்.