நாளை வருகிறார் அல்ஹுசைன்; கூட்டமைப்பையும் சந்திப்பார்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செயிட் அல் ஹூசைன் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை சனிக்கிழமை இலங்கை வருகிறார்.
சனிக்கிழமை அதிகாலை இலங்கை வரும் செயிட் அல் ஹூசைன் எதிர்வரும் 9 ஆம்திகதி வரை நாட்டில் தங்கியிருப்பதுடன் அரச தரப்பு, எதிர்த்தரப்பு, சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் வடமாகாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார்.
அத்துடன் நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ஐ.நா. மனித உரிமையாளர் செயிட் அல் ஹூசைன் அங்கு வடமாகாண முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படும் உள்ளக விசாரணைப் பொறிமுறை செயற்பாட்டில் வடமாகாணத்தின் பங்களிப்பு முக்கியத்துவமிக்கதாக இருக்குமென கருதப்படுகின்ற நிலையிலேயே செயிட் அல் ஹூசைன் வடமாகாண முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றார்.
விசேடமாக விசாரணை பொறிமுறையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் செயற்பாடு எவ்வாறு அமையும் என்பது குறித்து இதன் போது கலந்துரையாடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.இதேவேளை நாளை சனிக்கிழமை மாலை கொழும்பு திரும்பவுள்ள செயிட் அல் ஹூசைன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அரச தரப்பினருடனான சந்திப்பின்போது விசாரணைப் பொறிமுறை, நீதிவழங்கும் செயற்பாடு, காணாமல்போனோர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படுமென தெரிவிக்கப்படுகிறது.
விசேடமாக ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக எவ்வாறு உள்ளக விசாரணை வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமென அரசாங்க தரப்பில் செயிட் அல் ஹூசைனுக்கு விளக்கமளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்புக்களை அடுத்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் தமிழ் தேசியப் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தவிருக்கின்றார். இந்த சந்திப்பின் போது உள்ளக விசாரணைப் பொறிமுறை, அரசியல் தீர்வு விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. குறிப்பாக உள்ளக விசாரணைப் பொறிமுறையில் பாதிக்கப்பட்ட மக்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பில் இதன் போது ஆராயப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அரசாங்கம் விடுத்த உத்தியோகபூர்வ அழைப்புக்கு அமைவாகவே ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கிறார். கடந்த செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரின் போது அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
அந்தப் பிரேரணையில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைமீறல்கள், மனிதாபிமான சட்டமீறல்கள், தொடர்பில் பொதுநலவாய வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், வழக்கறிஞர்களை கொண்டு விசாரணை நடத்தவேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் இந்தப் பிரேரணையை அமுல்படுத்துவது தொடர்பான வாய்மூல அறிக்கையை எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி பிரேரணை அமுலாக்கம் தொடர்பான எழுத்துமூல அறிக்கையை அடுத்தவருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கவேண்டுமென பிரேரணை வலியுறுத்தியுள்ளது.
இது இவ்வாறு இருக்க இலங்கை தொடர்பில் விசாரணை ஒன்றை முன்னெடுத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் கடந்த வருடம் அந்த அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றத்தை அமைத்து சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னத்துடன் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் கலப்பு நீதிமன்றம் என்ற விடயம் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இந்தப் பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியதுடன் உள்ளக விசாரணையை மேற்கொள்வதாக வாக்குறுதியையும் வழங்கியது. எனினும் இதுவரை எவ்வாறான உள்ளக விசாரணையை முன்னெடுப்பது என அரசாங்கம் தீர்மானிக்கவில்லை.
அதுமட்டுமன்றி உள்ளக விசாரணை பொறிமுறையில் வெ ளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதா இல்லையா என்ற தீர்மானமும் இதுவரை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படாமல் உள்ளது. இவ்வாறான பின்னணியிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இலங் கைக்கு விஜயம் செய்கின்றார்.
இதற்கு முன்னர் கடந்த 2013ஆம் ஆண்டு முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றைமேற் கொண் டிருந்தமை குறிப் பிடத் தக்கதாகும்.