ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியவர்களைத் தாக்கும் திடீர் சுகவீனம் – மருத்துவமனையில் ராஜித
சுகாதார அமைச்சரான ராஜித சேனாரத்னவுக்கு நேற்று திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக சி்ங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
நேற்றுமாலை அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில், இரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, நேற்றிரவு அவசரமாக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் மருத்துவமனையில் அவருக்கு மேலதிக மருத்துவ பரிசோதனைகளும், உயர் சிகிச்சையும் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும், இது ஒரு வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என்றும், அவரது உடல்நிலையில் பாரிய பாதிப்புகள் ஏதும் இல்லை என்றும், அவரது பேச்சாளர் நிபுண் எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
வரும் திங்களன்று இந்தியாவில் நடக்கவுள்ள கருத்தரங்கு ஒன்றில் அமைச்சர் ராஜித சேனாரத்ன பங்கேற்கவுள்ளார் என்றும், சிங்கப்பூர் மருத்துவ பரிசோதனைகளை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் அவர் இந்தியா செல்வார் என்றும் அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்றுமாலை திடீர் உடல் நிலை பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
கடந்த ஆண்டு சிறிலங்காவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் ராஜித சேனாரத்ன முக்கிய பங்காற்றியவர்.
ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய, மாதுளுவாவே சோபித தேரர், முன்னாள் அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன ஆகியோர் கடந்த சில மாதங்களுக்குள் திடீர் உடல் நிலை பாதிக்கப்பட்டு, வெளிநாட்டு சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்ட நிலையில் மரணமாகியிருந்தனர்.
இப்போது ஆட்சி மாற்றத்தில் முக்கிய பங்காற்றிய ராஜித சேனாரத்னவும் உடல் நிலை பாதிக்கப்பட்டது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதிபர் தேர்தலில் போட்டியிட மைத்திரிபால சிறிசேனவுடன், ராஜித சேனாரத்னவும், எம்.கே.டி.எஸ்.குணவர்த்தனவுமே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து முதன்முதலில் எதிரணிக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.