Breaking News

வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

அமைதியான முறையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் நடத்திய தாக்குதலிற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடுவதற்கு ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி கொழும்பு – பொறளையில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குச் சென்று நாளை வெள்ளிக்கிழமை இந்த முறைப்பாட்டை செய்வதற்கு தீர்மானித்திருப்பதாக அந்த சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு புறக்கோட்டையில் நேற்று முன்தினம் வேலையில்லாப் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியினால் குறித்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆர்ப்பாட்டப் பேரணியை கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்ததோடு, வழமைபோல நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டனர். மேலும் இரும்பிலான தடுப்பு வேலிகளையும் அமைத்தனர்.

பொலிஸாரின் நடவடிக்கையை அடுத்து இருதரப்பினரிடையே பெரும் கருத்து மோதல் ஏற்பட்டதில் குழப்பம் விளைவிக்க முயற்சித்த குற்றச்சாட்டில் மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.