ஐங்கரநேசனுக்கு எதிரான பிரேரணை - ஹன்ஸாட்டிலிருந்து நீக்குமாறு சி.வி.கோரிக்கை
வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணையை ஹன்ஸாட்டிலிருந்து நீக்குமாறு, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வட மாகாண சபையின் 46ஆவது அமர்வு, இன்று (வியாழக்கிழமை) அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. இதன்போதே வடக்கு முதல்வர் இக் கோரிக்கையை முன்வைத்தார்.
இரணைமடு குடிநீர்த்திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கடந்த மாகாண சபை அமர்வில், ஐங்கரநேசனுக்கு எதிராக பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டு, அது சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், குறித்த பிரேரணை கொண்டுவரப்பட்டமை பிழையான விடயமென தெரிவித்து, வட மாகாண சபையின் எட்டு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வடக்கு முதல்வரிடம் கடிதமொன்றை கையளித்துள்ளனர்.
குறித்த கடிதத்தை இன்றைய சபை அமர்வில் வடக்கு முதல்வர் வாசித்துக் காட்டியுள்ளார். குறித்த பிரேரணை திட்டமிடப்படாமல் திடீரென கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அதனை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் சபையை அநாகரிகமாக நடத்த வேண்டாமென்றும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.