ஜெனீவா தீர்மானம் அமுல்படுத்தப்படவேண்டும் - ஐ.நா ஆணையாளரிடம் சுமந்திரன்
இலங்கை குறித்து ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்தவேண்டுமென ஐ.நா ஆணையாளருக்கு தாம் எடுத்துரைத்ததாகவும், ஐ.நா ஆணையாளரின் நிலைப்பாடும் அவ்வாறே காணப்பட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசைனுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சுமந்திரன் மேற்குறித்தவாறு தெரிவித்தார். குறித்த சந்திப்பு தொடர்பில் சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில்-
‘நாம் சுமார் ஒரு மணித்தியாலமாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் எமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினோம். இதன்போது, இலங்கை குறித்து ஐ.நா மனித பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, இலங்கை அரசாங்கம் எவ்வித மாற்றமும் இன்றி முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென நாம் எடுத்துரைத்தோம்.
இது தன்னிச்சையாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அல்ல. இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச சமூகம் ஆகியவற்றுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி, அதன் இணக்கப்பாட்டுடனேயே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆகவே அவர்கள் அதிலிருந்து விலகிச் செல்ல முடியாது. அதனை அமுல்படுத்தவேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடமையென்பதை நாம் ஐ.நா ஆணையாளரிடம் சுட்டிக்காட்டினோம். ஐ.நா ஆணையாளரின் நிலைப்பாடும் அவ்வாறே காணப்பட்டது.
மேலும், சர்வதேச சட்டத்தின்கீழ் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென சொல்லிக்கொண்டு பொதுமன்னிப்பு என்று சொல்வது பிழையான விடயமென்றும், ஆனால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு பிழையான விதத்தில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்பதில் தமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லையென்றும் ஐ.நா ஆணையாளர் குறிப்பிட்டார். அதுகுறித்து தாம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாவும் தெரிவித்தார்.
மேலும் காணிகளை விடுவிக்கவும், அரசியல் கைதிகளை விடுவிக்கவும், காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை தொடர்பிலும், குறிப்பாக அரசியல் தீர்வு குறித்தும் ஐ.நா ஆணையாளருடன் நாம் கலந்துரையாடினோம்’ என சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.