நல்லிணக்க செயற்றிட்டங்கள் குறித்து பிரதமரிடம் கேட்றிந்தார் ஐ.நா ஆணையாளர்
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இச்சந்திப்பானது இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஜெனீவா தீர்மானம் இலங்கையில் அமுல்படுத்தப்படும் விதம், அதன் செயற்பாடுகள் மற்றும் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் நல்லிணக்கம் தொடர்பான செயற்றிட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இலங்கையில் மனித உரிமை விடயங்களை நிலைநாட்டுவதில் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து ஐ.நா ஆணையாளருக்கு பிரதமர் குறிப்பிட்டார்.
இதேவேளை இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரியை சந்திக்கவுள்ள ஐ.நா ஆணையாளர், அதனையடுத்து தமது விஜயத்தின் நோக்கம் மற்றும் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து ஊடக சந்திப்பொன்றை நடத்தவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.