தீர்வு விடயத்தில் இந்தியா எம்முடன் இருக்கவேண்டும்! சுஷ்மாவிடம் வலியுறுத்துவோம்! என்கிறார் மாவை
இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் இந்தியா முழுமையாக எம்முடன் இருக்கவேண்டும். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய மீனவரின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்பன தொடர்பில் இலங்கை வரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் வலியுறுத்துவோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.
இலங்கைக்கு இன்று வெள்ளிக்கிழமை வருகை தரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நாளை சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.இக் கலந்துரையாடலில் பேசப்படும் விடயங்கள் தொடர்பில் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் திகதிக்குப் பின்னரான இலங்கை சூழலை இந்தியா உட்பட உலக நாடுகள் அவதானித்துக் கொண்டு வருகின்றன. இவ்வாறான சூழலில் இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகை முக்கியமானதாகும். அவருடைய வருகையின்போது நாம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதை வலியுறுத்தவுள்ளோம்.
குறிப்பாக இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் இந்தியா முழுமையாக எம்முடன் இருப்பது தொடர்பிலும் அவரிடம் எடுத்துரைப்போம்.
அத்துடன் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறும் இந்திய மீனவரின் மீன்பிடி நடவடிக்கை தொடர்பிலும் அதனால் எமது மீனவர்கள் எதிர்நோக்கும் சவால்கள், பிரச்சினைகள் குறித்தும் அவருக்கு எடுத்துக் கூறி அதற்கான தீர்வை முன்வைக்குமாறும் கோரவுள்ளோம்.
ஐ.நா. தீர்மானத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடுவோம். குறிப்பாக மீள்குடியேற்றம், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகள் விடுவிப்பு, வாழ்வாதாரம் போன்றவை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவோம். வடக்கு கிழக்குப் பகுதிகளின் தற்போதைய நிலவரங்கள் அபிவிருத்தியின் பின் தங்கிய நிலை தொடர்பாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் பேச்சு நடத்தவுள்ளோம் என்றார்.