பிரபாகரனின் கோரிக்கையை நிறைவேற்றும் ஒருவரே இன்று வடமாகாண ஆளுநர் - சமரவீர
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் எதிர்பார்த்த தீர்வையே வட,கிழக்கு மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறியவரான ரெஜினோல்ட் குரேயை வடமாகாண ஆளுநராக அரசாங்கம் நியமித்திருப்பதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் தனிநாட்டுக் கோரிக்கையை தைரியமாக முன்வைத்து வருகின்றனர்.ஈழத்து சமூகமும், புலம்பெயர் சமூகமும் எதிர்பார்க்கும் விடயங்களை தட்டிக்கழித்த முன்னாள் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிரி மீது கடும் கோபத்தை கொண்டிருந்தன.
இதனால் புலம்பெயர் சமூகம், வடக்கு மக்கள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியோரது பிரதான கோரிக்கையாக ஜி.ஏ.சந்திரசிரியை மாற்ற வேண்டும் என அமைந்திருந்தது.இந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்குவந்த அடுத்த கனம் ஜி.ஏ. சந்திரசிரியை பதவிநீக்கம் செய்து பலிஹக்காரவை பதவிக்கு அமர்த்தியது.
எனினும் பலிஹக்காரவும் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு இணங்கவில்லை.இவ்வாறு தனிநாடு கோருபவர்களுக்கு உறுதுணையாக அமையும் நடவடிக்கை ஒன்றை அரசாங்கம் முன்னெடுத்தது. அதாவது சமஷ்டி முறையை நியாயப்படுத்தி பிரசாரம் செய்தவரான முன்னாள் முதலமைச்சர் ரெஜினோல்ட் குரேயை வடமாகாண ஆளுநராக நல்லாட்சி அரசாங்கம் நியமித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கோருகின்றவற்றை கொடுத்தால் மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று ரெஜினோல்ட் குரே முன்னர் கூறியிருந்தார்.இவ்வாறு சமஷ்டியை நியாயப்படுத்தும், தனிநாட்டை வழங்க தயாராகும் ஒருவரே இன்று வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார் - என்றார்.